"சாரதா கொலையை பாருங்க.. டெல்லியில் மட்டும் 420 லவ் ஜிகாத் சம்பவங்கள்.. லிஸ்டே இருக்கு!" விஎச்பி பகீர்
மும்பை: சாரதா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், விஸ்வ இந்து பரிஷத் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் சாரதா என்பவர் டெல்லியில் தனது காதலன் அப்தாப் உடன் இணைந்து வாழ்ந்து வந்தார். சாரதா தனது காதலனுக்காகப் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டும் வெளியேறினார்.
பல முறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டும் கூட சாரதாவை அப்தாப் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை எனச் சொல்லப்படுகிறது.
வாத் டிரெய்லர்! டெல்லியை உலுக்கிய சாரதா வாக்கர் கொலை வழக்கின் சாயலா? நடிகை நீனா குப்தா பதில்

சாரதா படுகொலை
இருப்பினும், அப்தாப்- சாரதா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் அப்தாப் சாரதாவை தாக்கியும் உள்ளதாகவே தெரிகிறது. இருந்த போதிலும், அப்தாப்பை விட்டு சாரதா விலகிச் செல்லவில்லை. அப்படித்தான் கடந்த மே மாதம் ஏதோ ஒரு விவகாரத்தில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், கோபம் தலைக்கேறிய அப்தாப், சாரதாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான். அதன் பிறகு அவன் செய்தது தான் கொடூரத்தின் உச்சம். சாரதாவின் உடலை 35 பாகங்களாக வெட்டி அதை டெல்லியில் பல பகுதிகளில் போட்டுள்ளான்.

லவ் ஜிகாத்
இந்தச் சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் தீவிரமாக விசாரணை நடந்து வரும் நிலையில், உண்மையைக் கண்டறியும் சோதனையையும் அவனிடம் போலீசார் நடத்தியுள்ளனர். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சாரதாவின் தந்தை "லவ் ஜிகாத்" காரணமாகத் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்திருந்தார். இந்த கோணத்திலும் போலீசார் தனது மகளின் படுகொலையை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சட்டம் தேவை
இதற்கிடையே வலதுசாரி அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தும் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. சாரதாவை அவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்த அப்தாப் என்ற இளைஞர் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது, அவர் லவ் ஜிகாத் உறவு காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் லவ் ஜிகாத் தடுப்பு சட்டம் தேவை என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

10 ஆண்டுகளில்
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் மட்டும் 420 லவ் ஜிகாத் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இது தொடர்பான பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும் விஎச்பி தெரிவித்துள்ளது. சாரதா கொலையைச் சந்தேகமின்றி, லவ் ஜிகாத் படுகொலை என்று குறிப்பிட்ட அந்த அமைப்பு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் வரும் காலத்தில் ஏற்படுவதைத் தடுக்க நாடு முழுக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுதியுள்ளது. மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்த உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரசாரம்
இது தொடர்பாக விஎச்பி அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், "அப்தாப்திற்கு மொத்தம் 20 கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேருமே இந்துக்கள் தான். இதை பார்த்தால் ஏதோ திட்டமிட்டு நடத்தப்பட்டது போலவே இருக்கிறது. மேலும், வரும் டிசம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை எங்கள் மகளிர் அணியான துர்கா வாஹினி லவ் ஜிகாத் குறித்து இந்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'தரம் ரக்ஷா' என்ற பிரசாரத்தை நடத்த உள்ளோம்" என்றார்.

கொடூரம்
சாரதா படுகொலை நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. விசாரணையின் போது வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் பகீர் அளிக்கும் வகையிலேயே உள்ளது. சாரதாவின் உடலை அந்த கொடூரன் மொத்தம் 35 பீஸாக வெட்டியுள்ளான். மேலும், சாரதாவின் உடல் வீட்டில் பிரிட்ஜில் இருக்கும் போதே, மற்றொரு பெண்ணையும் அவன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். இந்தச் சம்பவம் குறித்து பேலீசார் அவனிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெறும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.