நடுநடுங்கிய நாகை.. நடுக்கடலில் இரட்டை கொலை! கண்டனம் தெரிவித்து 15 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்
நாகை: நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளார்கள்.
நாகை மாவட்டத்தின் மீனவ கிராமமான அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆத்மநாபன், சிவனே செல்வம் மற்றும் காலஸ்திநாதன். சகோதரர்களான இவர்கள் பைபர் படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இவர்கள் மூவரும் கடலுக்கு நடுவே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்று உள்ளனர். அக்கரைப்பேட்டை மீனவ சகோதரர்கள் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டு இருந்த வழியாக கீச்சாங்குப்பம் மீனவர்களின் படகு சென்று உள்ளது.

அப்போது அந்த பைபர் படகில் அக்கரைபேட்டை சகோதரர்களின் மீன்பிடி வலையும் சிக்கி சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் விசைப் படகில் சென்ற கீச்சாங்குப்பம் மீனவர்களிடம் இது பற்றி கேட்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது மற்றொருவர் சரிமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டனர். இந்த தாக்குதலில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களின் பைபர் படகும் சேதமடைந்தன.
படுகாயம் அடைந்த மீனவர்கள் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் சிவனே செல்வமும், காலஸ்திநாதனும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆத்மநாபனுக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டு நாகை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் 2 மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்பட்டதை கண்டித்து நாகையில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
கீழ்வேளூர், வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 15 கிராமங்களின் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாகை மீனவர்கள், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவை மடிவலை மீன்பிடி முறையை தடை செய்ய வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கரையோரங்களில் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன்.












Click it and Unblock the Notifications