"செஞ்சி சிறுமியை பார்த்ததாக சொன்னேன்! சிபிசிஐடி என் நடத்தையை அசிங்கப்படுத்திட்டாங்க.." பெண் புகார்
நாமக்கல்: செஞ்சி சிறுமியை நாமக்கல்லில் பார்த்ததாக துப்பு கொடுத்ததற்காக சிபிசிஐடி போலீஸார் விசாரணை என்ற பெயரில் எனது கேரக்டரை அசிங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளேன் என அங்கன்வாடி சமையலர் பவானி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கோணனூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் செஞ்சியில் காணாமல் போன சிறுமியை நாமக்கல்லில் பார்த்ததாக தகவல் தெரிவித்தார்.

ஆனால் அந்த தகவலால் தற்போது தான் வேதனையில் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 23 ஆம் தேதி நாமக்கல்லில் ஒரு குழந்தையை பார்த்தேன். அந்த குழந்தையுடன் 55 வயது முதியவரும் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இருந்தனர். நான் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
செல்போனில் பார்த்த செஞ்சி சிறுமி
பிறகு 29ஆம் தேதி என் மகளின் செல்போனில் செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் புகைப்படம் இருந்தது. அதை பார்த்ததும் நான் அன்று பார்த்த சிறுமி இந்த போட்டோவில் பார்க்கும் சிறுமியை போல் இருக்கிறார் என்பது 90 சதவீதம் எனக்கு தெரிந்தது.
100-க்கு போன்
உடனே 100-க்கு போன் செய்து செஞ்சியில் காணாமல் போன சிறுமியை நான் குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன் என தெரிவித்தேன். இந்த தகவலை கேட்டதும் நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி போலீஸார் என்னிடம் விசாரித்தனர். நான் பார்த்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று வீடியோ எடுத்துக் கொண்டனர்.
நல்லெண்ணத்தில் செய்தேன்
என்னால் ஒரு குழந்தை காப்பாற்றப்படும் என்று நான் உதவ முன் வந்தால் கடைசியில் என் வேலைக்கே உலை வைத்துவிடும்படி போலீஸார் நடந்து கொள்கிறார்கள். செஞ்சியை சேர்ந்த முத்துக்குமார் என்ற சிபிசிஐடி அதிகாரி, நான் அங்கன்வாடி சமையலராக பணியாற்றும் பள்ளிக்கே வந்து என்னை பற்றி விசாரித்துள்ளார்.
கேரக்டரை அசிங்கப்படுத்துறாங்க
என் கேரக்டரை அசிங்கப்படுத்தும் வகையில், நான் குடும்பத்துடன் இருக்கிறேனா, தனியாக இருக்கிறேனா, வீட்டுக்காரருடன் வாழ்கிறேனா, எனக்கு எத்தனை குழந்தைகள் என அடுக்கடுக்கான கேள்விகளை பள்ளியில் இருந்தவர்களிடம் முன் வைத்திருக்கிறார்.
மனஉளைச்சல்
சிறுமி குறித்து தகவலை சொன்னது சரியா தவறா என்று கூட எனக்கு தெரியவில்லை, அந்த அதிகாரியால் நான் மனஉளைச்சலுக்குள்ளாகியுள்ளேன். நான் சொன்ன விஷயத்தை விட்டுவிட்டு என்னை அச்சுறுத்தும் விதமாக நான் பணியாற்றும் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரை சந்தித்து 2 மணி நேரம் விசாரித்தார். அது போல் சத்துணவு உதவியாளரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
யார் தகவலை சொல்வார்கள்?
இப்படியெல்லாம் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினால் யார் தகவல் சொல்ல முன் வருவார்கள். எனவே சிபிசிஐடி முத்துக்குமார் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சொன்ன தகவல் உண்மை. அதை விசாரிக்காமல் என்னை பற்றி விசாரித்துள்ளார். இதனால் வேலைக்கு போவதற்கே பயமாக இருக்கிறது. எனது செல்போனை டிரேஸ் செய்வார்களோ என்ற பயமும் எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
25 நாளாச்சு
செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் 25 நாட்கள் ஆகிறது. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீஸார் குழப்பத்தில் உள்ளனர்.
சிறுமி எங்கே இருக்கிறார்?
சிறுமி உயிருடன் இருக்கிறார் ,ஆனால் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். கடலூர் மாவட்டம் புவனகிரியில் பார்த்ததாக சொல்கிறார்கள். தற்போது நாமக்கல்.. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில்தான் இவர்கள் பார்த்தது செஞ்சி சிறுமிதானா என்பது தெரியவரும்.



Click it and Unblock the Notifications
