பல பில்லியன் முக ரேகைகளை அழிக்கும் பேஸ்புக்.. ஃபேஷியல் ரெக்கக்னிஷன் வசதிக்கு முற்றுப்புள்ளி-பின்னணி
நியூயார்க்: முக அடையாளம் காணும் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் வசதியை ( facial recognition) கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மக்களின் முக ரேகைகளை மொத்தமாக அழிப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் பல்வேறு அதிரடி மாற்றங்களை சமீப நாட்களாக செய்து வருகிறது. முக்கியமாக பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் பேஸ்புக் ஐஎன்சி என்பதில் இருந்து மெட்டா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மெட்டா நிறுவனம் மூலம் மெட்டாவெர்ஸ் என்ற புதிய விர்ச்சுவல் உலகத்தையும் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தி உள்ளார்.
ரெடி பிளேயர் 1 போன்ற ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற விர்ச்சுவல், மெய்நிகர் உலகை நோக்கி மக்களை கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறது.

பேஸ்புக்
இப்படிப்பட்ட நேரத்தில்தான் பேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஷியல் ரெக்கனிஷன் வசதியை நீக்கி உள்ளது. பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுக்க பல கோடி பேர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் பிரைவசி விதிகள் முறையாக இல்லை என்று புகார்கள் உள்ளன. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா டேட்டா முறைகேடு புகாரில் இருந்தே பேஸ்புக்கின் பிரைவசி விதிமுறைகள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

முக ரேகை
அதிலும் பேஸ்புக்கின் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் வசதி, மக்களின் முகம் ஏற்படுத்தும் மாறுதல்களை வைத்து டைம்லைனை மாற்றுவதாகவும், அதற்கு ஏற்றபடி விளம்பரங்களை தருவதாகவும் புகார் உள்ளது. அதேபோல் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் மூலம் பெறப்பட்ட மக்களின் முக ரேகைகளை பேஸ்புக் முறையின்றி பயன்படுத்துவதாகவும் பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வந்தன.

புகார்கள்
2010ல் இருந்து ஃபேஷியல் ரெக்கக்னிஷன் வசதியை பேஸ்புக் பல்வேறு விஷயங்களில் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக குரூப் போட்டோ போடும் போதும் உங்கள் நண்பரின் முகத்தை போட்டியில் அடையாளம் கண்டுகொண்டு அவரை டேக் செய்கிறீர்களா என்று பேஸ்புக் கேட்கும். இதுவும் கூட ஃபேஷியல் ரெக்கக்னிஷன் மூலம் செய்யப்படுவதுதான். இதற்கு அமெரிக்காவில் சில மாகாணங்கள் சட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்ப்பு
இதற்காக பேஸ்புக்கிற்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இல்லினாய்சில் இதேபோன்ற வழக்கு ஒன்றில் பேஸ்புக் நிறுவனம் 650 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் பேஸ்புக் நிறுவனம் இந்த ஃபேஷியல் ரெக்கக்னிஷன் வசதியை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

கைவிட்டது
இதுவரை சேமிக்கப்பட்ட பல பில்லியன் மக்களின் முக அடையாளங்களை, ரேகைகளை மொத்தமாக தங்கள் டேட்டாவில் இருந்து பேஸ்புக் அழிக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த ஃபேஷியல் ரெக்கக்னிஷன் குறித்த பல கவலைகள் சமுதாயத்தில் நிலவுவதாலும், இது தொடர்பான பல சட்டங்கள் ஃபேஷியல் ரெக்கக்னிஷனுக்கு எதிராக இருப்பதாலும் இந்த வசதியை நீக்குகிறோம்.

பல பில்லியன் ரேகை
இதனால் நாங்கள் பல பில்லியன் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் ரேகைகளை அழிக்க வேண்டி இருக்கும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவனத்தின் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் வசதி நீக்கம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரியவில்லை. பேஸ்புக் நிறுவனம் தங்களின் பெயர், பிராண்ட் ஆகியவற்றை மாற்றி நல்ல மதிப்பை பெற முயன்று வருகிறது. மெட்டா என்ற பெயர் மாற்றமும் இதனால்தான் வந்தது. தற்போது ஃபேஷியல் ரெக்கக்னிஷன் நீக்கமும் இதன் ஒரு கட்டமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications