உலகெங்கும் வீழும் வலதுசாரி அரசியல்! டிரம்ப், நெதன்யாகு சரிவைத் தொடர்ந்து அடுத்து மோடியா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த 10- 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒரு பொதுவான அரசியல் போக்கு தென்பட்டது. அது தீவிர தேசியவாதம், மத அல்லது கலாச்சார அடையாளங்கள், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் ராணுவப் பலத்தை முதன்மைப்படுத்திய வலதுசாரி அரசியல் அலை. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் ஜேர் போல்சனாரோ, இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவில் நரேந்திர மோடி எனப் பல தலைவர்கள் அசைக்க முடியாத சக்திகளாக உருவெடுத்தனர்.

ஆனால், வரலாறு எப்போதுமே ஒரே திசையில் நகர்வதில்லை. கடந்த சில ஆண்டுகளில் எகிறிய பணவீக்கம், வாழ்க்கைச் செலவு, போர்கள் மீதான மக்களின் கடும் அதிருப்தி மற்றும் அதிகாரக் குவிப்புக்கு எதிரான மக்களின் கோபம் ஆகியவை வலதுசாரி அரசியலின் அடித்தளத்தையே அசைக்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் வரை சர்வதேச அளவில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் அரங்கேறி வருகிறது. வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி பின்னர் வீழ்ந்த நாடுகளின் பட்டியல் என்ன, உலகெங்கும் மக்கள் அளிக்கும் சேதி என்ன என்பதை விரிவான தரவுகளுடன் பார்ப்போம்.

Trump Midterm Loss 2026

அமெரிக்கா: டிரம்ப் கொள்கைகளுக்கு விழுந்த பலத்த அடி (2026)

2024-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு இந்த 2026 இடைத்தேர்தல் மிகக் கடுமையான அடியாக விழுந்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 218 இடங்களைத் தாண்டி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று சபையைக் கைப்பற்றியுள்ளது. செனட்டிலும் வரலாற்றுத் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.. கன்சாஸ் (1932-க்குப் பின்), டெக்சாஸ் (1988-க்குப் பின்), அயோவா மற்றும் தெற்கு கரோலினா போன்ற பழமைவாதக் கோட்டைகள் சரிந்து ஜனநாயகக் கட்சி செனட்டின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுத்துள்ளது. ஆதிக்கப் போக்கு, கடுமையான உள்நாட்டுக் கொள்கைகள், வெளிநாட்டுப் போர்களுக்கு பில்லியன் கணக்கில் வரிப்பணத்தை வாரியிறைக்கும் அணுகுமுறைக்கு அமெரிக்க நடுத்தர மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இஸ்ரேல்: போரின் நாயகனாகத் திகழ்ந்த நெதன்யாகுவின் வீழ்ச்சி

இஸ்ரேல் வரலாற்றிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த தீவிர வலதுசாரித் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அண்மையில் (அக்டோபர் 27, 2026) நடைபெற்ற 26-வது நெசெட் தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 120 இடங்களில் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி 27 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்தது.

அவரது ஒட்டுமொத்த வலதுசாரி கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சி அமைக்கும் 61 இடங்களின் பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கிறது. காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றி நெதன்யாகுவை அதிகாரத்திலிருந்து இறக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன. இடைவிடாத போர், பாதுகாப்புத் தோல்வி மற்றும் உள்நாட்டு அதிகாரக் குவிப்புக்கு மக்கள் அளித்த கடுமையான தீர்ப்பாக இது அமைந்தது.

பிரேசில்: 'ஜேர் போல்சனாரோவின் சரிவு

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில், தீவிர வலதுசாரி பாசிசக் கொள்கைகளுடன் வலம்வந்த ஜேர் போல்சனாரோவை அந்நாட்டு மக்கள் 2022 அதிபர் தேர்தலில் தூக்கியெறிந்தனர். தொழிலாளர்களின் குரலாக ஒலித்த இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 50.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சுற்றுச்சூழல் அழிப்பு, அதிகாரபோக்கு மற்றும் மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்திய காரணத்தால் போல்சனாரோ மக்களால் நிராகரிக்கப்பட்டார்.

பிரிட்டன்: 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு விழுந்த சம்மட்டி அடி

பிரிட்டனில் போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் தலைமையிலான வலதுசாரி கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகள் நாட்டை ஆண்டது. 2024 பொதுத்தேர்தலில் மக்கள் அந்த ஆட்சிக்கு மரண அடி கொடுத்தனர். மொத்தமுள்ள 650 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 121 இடங்களுக்குச் சுருங்கிப் படுதோல்வி அடைந்தது.. கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி 411 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. பொது மருத்துவத்தில் பின்னடைவு , பொருளாதார மந்தநிலை மற்றும் கடுமையான பணவீக்கமே வலதுசாரிகளின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

போலந்து மற்றும் செர்பியா: ஐரோப்பாவில் அதிரடி திருப்பங்கள்

போலந்தில் தீவிர வலதுசாரி அரசாகப் பார்க்கப்பட்ட சட்டம் மற்றும் நீதி கட்சி, 8 ஆண்டுகால ஆதிக்கத்திற்குப் பிறகு 2023 தேர்தலில் ஆட்சியை இழந்தது.. டொனால்ட் டஸ்க் தலைமையிலான கூட்டணி அங்கு ஆட்சியைப் பிடித்தது. அதேபோல், பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய செர்பியாவின் வலதுசாரி அதிபர் அலெக்சாண்டர் வூசிச் மற்றும் அவரது கட்சி, மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் முன்னெடுத்த வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் அக்டோபர் 2026 பொதுத்தேர்தலில் 140 இடங்களைக் கைப்பற்றிய மாணவர் முன்னணி எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

உலகளாவிய அதிகாரப் போக்கும் தலைவர்களின் நிலவரமும்

இந்த மாற்றங்களை உற்றுநோக்கினால், அமெரிக்காவில் அதிதீவிர வலதுசாரி பாணியில் இயங்கிய டொனால்ட் டிரம்ப் தனது நாடாளுமன்ற அதிகாரப் பெரும்பான்மையை 2026 இடைத்தேர்தலில் பறிகொடுத்துள்ளார். இஸ்ரேலில் சுமார் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பெஞ்சமின் நெதன்யாகு, 2026 நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணிக்கான 61 இடங்களின் பெரும்பான்மையை இழந்து தத்தளிக்கிறார். பிரிட்டனில் 14 ஆண்டுகள் அசைக்க முடியாமல் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக், வெறும் 121 இடங்களாகச் சுருக்கப்பட்டு படுதோல்வி அடைந்தார். பிரேசிலில் பாப்புலிஸ்ட் வலதுசாரியான ஜேர் போல்சனாரோவும், போலந்தில் தேசியவாத வலதுசாரியான ஜரோஸ்லாவ் கட்சின்ஸ்கியும் ஏற்கனவே ஜனநாயகக் கூட்டணிகளால் வீழ்த்தப்பட்டு ஆட்சியை இழந்தனர்.

டிரம்ப், நெதன்யாகுவை அடுத்து நரேந்திர மோடியா?

உலகெங்கும் தென்படும் இந்த ஜனநாயக எழுச்சி இந்தியாவிற்கும் மிக முக்கியமான செய்தியை முன்வைக்கிறது.

2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடன் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் வெற்றிப் பயணத்திலும் ஏற்கனவே முதல் எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகள் தாண்டுவோம் என முழங்கிய பாஜக, 240 இடங்களுக்குச் சுருங்கி தனிப் பெரும்பான்மையை இழந்தது; தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

உலகளாவிய இந்த வலதுசாரி வீழ்ச்சிகளுக்குப் பின்னால் சில பொதுவான காரணிகள் உள்ளன. மதம், சாதி மற்றும் தீவிர தேசியவாதப் பேச்சுகள் குறிப்பிட்ட காலம் மட்டுமே வாக்குகளை ஈர்க்கும்.. க்களின் மளிகைப் பொருட்கள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற நிதர்சனங்களுக்கு அவை தீர்வாகாது என்பதை வாக்காளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மேலும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான அதிருப்தி உலகெங்கும் எரியும் நெருப்பாக மாறியுள்ளது. அரசு அமைப்புகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதிகாரத்தைக் குவிப்பது போன்ற போக்கிற்கு மக்கள் தேர்தல் களத்தில் தங்களின் அமைதியான வாக்குகள் மூலமே பாடம் கற்பிக்கின்றனர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் போன்ற எஃகுக் கோட்டைகளே தகர்ந்து விழும்போது, இஸ்ரேலில் போர்ச் சூழலிலும் நெதன்யாகு பெரும்பான்மையை இழக்கும்போது, "எந்தவொரு கட்சியும், எந்தவொரு தலைவரும் நிரந்தரமானவர்கள் அல்ல.. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மறந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்ற உலகளாவிய அலை இப்போது இந்தியா நோக்கியும் கேள்வி எழுப்புகிறது.. டிரம்ப் மற்றும் நெதன்யாகுவைத் தொடர்ந்து அடுத்த அரசியல் மாற்றம் இந்தியாவில் நிகழுமா? காலம் மட்டுமே பதில் சொல்லும்.

ஆனால் இதை எல்லாமே உற்றுநோக்கும் போது இன்னொரு கேள்வியும் கூடவே வருகிறது.. மேலே நாம் கண்ட வலது சாரி ஆட்சி கவிழ்ந்த எந்த நாட்டிலும் வாக்கு திருட்டு புகார் இல்லை என்பதையும் மறக்க கூடாது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+