நியூயார்க் நகரம் கடலில் மூழ்க வாய்ப்பு.. நாசா திடுக்கிடும் தகவல்
நியூயார்க்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக நாசா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. பனிப்பாறை உருகுவதும், மனிதர்களின் இயற்கைக்கு மாறான செயல்பாடுகளுமே இதற்கு காரணம் என்கிறது நாசா.
பருவ நிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடல் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயரும் போது, உலகின் சில முக்கிய நகரங்களில் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என்கிறது நாசாவின் ஆய்வு. அப்படி ஒரு ஆய்வை தான் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் பற்றி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதுபற்றி தெரிவித்துள்ள ஆய்வறிக்கையில், நியூயார்க் நகரப் பெருநகரப் பகுதியில் கட்டிடங்கள் அதிக அளவில் கட்டுதல், அளவுக்கு மீறிய கட்டிடங்களால் நிலப்பரப்பின் அளவு குறைவது, நிலத்தடி நீரை கண்டபடி உறிஞ்சுவது, மாசுபட்ட நீரை சுத்திகரிக்க பயன்படுத்தும் கிணறுகள் போன்ற மனிதர்களின் செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இது போன்ற மனித செயல்பாடுகள் மற்றும் நீண்டகாலமாக உருகி வரும் பனிப்பாறைகள் போன்ற காரணங்களால் கணிசமான அளவு நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடல் நீர் மட்டம் உயர்ந்து வரும் அளவு சிறிதளவே என்றாலும், வருடா வருடம் கணிசமாக உயர்ந்து கொண்டே வருவதால், வெள்ள அபாயத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம் என்கிறது நாசாவின் ஆய்வறிக்கை.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வுமுடிவில் தான் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
மனித செயல்பாடுகளால் நிலப்பரப்பின் உயரம் குறைவதாகவும், நிலத்தில் அதிக அளவு கட்டுமானங்களை ஏற்படுத்துவது, குறிப்பாக எந்தவொரு இடைவெளியும் இல்லாத அளவுக்கு கட்டுமானங்களை கட்டுவது போன்றவை புவி பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனினும் இந்த மாற்றங்கள் உடனடியாக நடந்து விடுவதில்லை என்று இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக பெரு நகர பகுதிகள் ஆண்டுக்கு 1.6 மில்லி மீட்டர் அளவுக்கு குறைந்திருப்பதாக நாசாவின் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் வெள்ளங்கள், புயல்கள் உள்ளிட்டவையும் நிலத்தின் உயரம் குறைவதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications