நம்பினால் தெய்வம்.. இல்லையென்றால் "சிலை" தான்! சொன்னவர் பாஜக எம்எல்ஏ! லக்ஷ்மி தேவி குறித்தும் பரபர
பாட்னா: பீகார் பாஜக சட்டசபை உறுப்பினர் லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து பேசியுள்ள சில கருத்துகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் கடந்த 2020இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அப்போது பாஜக உடன் இணைந்து நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சியை அமைத்தார்.
நிதிஷ் கட்சி 43 இடங்களில் மட்டுமே வென்ற இருந்தது. இருப்பினும், அவரே பீகார் முதல்வர் பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
பிரிவினைவாதம்.. காஷ்மீரை தனிநாடாக அங்கீகரித்து கேள்வி.. வினாத்தாளால் வெடித்த சர்ச்சை..பாஜக கொதிப்பு

பீகார்
இருந்த போதிலும் அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே உறவில் அவ்வப்போது தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது. இந்தச் சூழலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு நிதிஷ்குமார், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளார். ஆர்ஜேடி கட்சியில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவி ஏற்றார். இதையடுத்து பாஜக இப்போது எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

பாஜக எம்எல்ஏ
பீகாரில் அடுத்து நடக்கும் மக்களவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பீகார் பாஜக சட்டசபை உறுப்பினர் லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் பிர்பைண்டி எம்எல்ஏவான அவர், இந்து நம்பிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய நிலையில், தனது நிலைப்பாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் வாதிட்டார்.

லட்சுமி தேவி
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பாகல்பூரில் போராட்டம் நடத்தப்பட்டு அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடுவது குறித்தும் பாஸ்வான் கேள்வி எழுப்பி இருந்தார். அவர், "லக்ஷ்மி தேவியை வழிபட்டாலே செல்வம் கிடைக்குமா என்ன. அப்படிப் பார்த்தால் முஸ்லீம்களில் யாருமே கோடீஸ்வரர் ஆகி இருக்க முடியாதே.

இஸ்லாமியர்கள்
மிகவும் வலிமையான இறைவனாக பஜ்ரங்பலி நம்பப்படுகிறது. இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வழிபடுவதில்லை. அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதில்லையா? முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை.. அவர்கள் எப்படி பணக்காரர் ஆகிறார்கள்? முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதில்லை.. பின் எப்படி அவர்கள் அறிஞர்களாகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் ஆகிறார்களே அது எப்படி? "ஆத்மா மற்றும் பரமாத்மா" என்பது மக்களின் நம்பிக்கை மட்டுமே.. வெறு எதுவும் இல்லை.

கல் சிலை தான்
நீங்கள் நம்பினால் அது தெய்வம்.. இல்லை என்றால் அது வெறும் கல் சிலை தான். கடவுள், தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவாகும். தர்க்கரீதியான முடிவுக்கு வர அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நீங்கள் இவற்றை நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில், இவை அனைத்தும் முடிவடையும்" என்று அவர் தெரிவித்தார்.

போராட்டம்
இந்தக் கருத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பீகார் பிர்பைண்டி தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றவர் லாலன் பாஸ்வான்.. சமீபத்தில் இவர் ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடன் தொலைப்பேசியில் பேசிய உரையாடல் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக
அங்கு மக்களவை தேர்தலில் வெல்லும் முனைப்பில் பாஜக களமிறங்கி உள்ளது. இப்போது நிதிஷ் குமாரால் அங்குப் புதுவித கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாஜக சற்று தனது பிளான்களை சற்று மாற்ற வேண்டி உள்ளது. இதுநாள் வரை பீகாரில் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் மோடிக்காகக் கிடைத்ததாகவே இருந்தது. இப்போது பலமான கூட்டணியை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் மாநிலத்தில் புதிய தலைவரை முன்னிறுத்த வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு உள்ளது..