பெரம்பலூர் டீக்கடை கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
பெரம்பலூர்: பெரம்பலூரில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மேலும் ஒருவர் பலியானார்.
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே காவல் நிலையம் எதிரே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் 10 மீட்டர் அளவிற்கு பரவிய தீ ஜுவாலையால் அந்த பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர்.

கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த சிறு குடலைச் சேர்ந்த டீ மாஸ்டர் தினேஷ்குமார் (33), குறிச்சி நகரைச் சேர்ந்த வேலை செய்யும் பெண் புவனேஸ்வரி (32), ரங்காநகர் சகாதேவன்(53), பொம்மனபாடி மணிகண்டன் (42), கொட்டரை ஆறுமுகம்(50) மற்றும் பேரளியைச் சேர்ந்த சிறுமி மித்ரா (14) உட்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த மணிகண்டன், தினேஷ்குமார், சகாதேவன், ஆறுமுகம், புவனேஸ்வரி உள்ளிட்ட சிலருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ல் தினேஷ் குமார், சகாதேவன், 17 ஆம் தேதி கொட்டரையைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்தனர்.
சிகிச்சையில இருந்த டீ கடையில் வேலை பார்த்து வந்த புவனேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி அளவில் திருச்சி தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (47) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
