தந்தத்துடன் வலம் வந்த யானை லட்சுமி! தும்பிக்கை துடிக்க துடிக்க இறந்த அந்த ஒரு நொடி.. சிசிடிவி காட்சி
புதுவை: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலை சேர்ந்த லட்சுமி எனும் யானை (32) சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பக்தர்களின் மனதை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலுக்கு வராமல் செல்ல மாட்டார்கள். உள்ளூர் மக்களும் இந்த கோயிலில் எப்போதும் தரிசிக்க செல்வது உண்டு.
அது போல் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யானை லட்சுமியை சந்திக்காமலும் ஆசி வாங்காமலும் செல்ல மாட்டார்கள்.
அதிகாலையில் வாக்கிங் போன லட்சுமி யானை..மயங்கி விழுந்து மரணம்..மணக்குள விநாயகர் கோவிலில் சோகம்

லட்சுமி எனும் பெண் யானை
1996 ஆம் ஆண்டு 5 வயதில் லட்சுமி இந்த மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. சுமார் 27 ஆண்டுகளாக புதுவை மாநில மக்களுடனும் சுற்றுலா பயணிகளுடனும் குழந்தையாக பழகியது. இந்த யானை பெண்ணாக இருந்தாலும் இதற்கு தந்தம் இருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாக பக்தர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

ஆண் யானைகளுக்கு தந்தம்
பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் தந்தம் இருக்கும். சிறப்பு நாட்களில் லட்சுமியின் காலில் வெள்ளி கொலுசு அணிவிக்கப்படும். இந்த கொலுசு சப்தத்துடன் யானை ஒய்யாரமாக நடந்து வரும் காட்சிகளை மக்கள் ரசிப்பர். விசேஷ நாட்களில் அணிவிக்கப்படும் கொலுசை பார்ப்பதற்காகவே மக்கள் திரண்டு வருவார்கள்.

மணக்குள விநாயகர் கோயில்
மணக்குள விநாயகர் கோயில் தேரின் போது தும்பிக்கையை அசைத்துக் கொண்டு காலின் கொலுசு சப்தத்துடன் மேள வாத்தியங்களின் இசைக்கேற்ப நடனமாடுவதாகவே தெரியும். அந்த அளவுக்கு அழகோ அழகு! பக்தர்களுடன் மிகவும் பாசமாக பழகக் கூடியது. தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்களள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

லட்சுமி யானை
இந்த முகாமில் யானை லட்சுமியும் சென்றுவிட்டு புதுவை திரும்பும். கடந்த இரு ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் இந்த ஆண்டு கோயில் நிர்வாகம், வனத்துறையின் அறிவுறுத்தலின்படி லட்சுமி தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்களுக்கு ஓய்வெடுக்க அனுமதித்தது. இதனால் லட்சுமி மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரவில்லை. அவளை பார்க்கவும் யாருக்கும் அனுமதி இல்லை. யானை நீரிழிவு நோயால் காலில் ஏற்படும் புண்ணால் அவதிப்பட்டு வந்தது.

களி, ஊட்டச்சத்து மருந்துகள்
இதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த யானையை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்த பிறகே மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயில் இருப்பிடத்தில் இருந்து நடைப்பயிற்சி சென்றது.

யானை மயங்கியது
அப்போது கல்வே கல்லூரி அருகே சென்ற போது யானை திடீரென மயங்கி விழுந்தது. உடனே சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. யானை லட்சுமி பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறியிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனையின் முடிவுகள் வந்தால் மட்டுமே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும்.

கண்ணீர் அஞ்சலி
இறந்த யானை கிரேன் மூலம் தூக்கப்பட்டு லாரியில் கொண்டு வரப்பட்டது. யானை எந்த இடத்தில் மணக்குள விநாயகர் கோயிலில் இருந்து ஆசி வழங்குமோ அந்த இடத்தில் அதன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த யானை இறப்புக்கு புதுவை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். யானை எப்படி இறந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன
அதில் யானை காமாட்சி கோயில் அருகே இன்று காலை 5.30 மணிக்கு இரு பாகன்களுடன் நடைப்பயிற்சிக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. நடந்து சென்ற போது திடீரென நடுவே நின்றுவிடுகிறது. பிறகு பாகன்கள் என்னவென அதன் பாஷையில் கேட்கிறார்கள். உடனே இரு கார்களுக்கு இடையே இருக்கும் கேப்பில் போய் நிற்கிறது. அப்போதே ஏதோ அதன் உடலுக்கு அசவுகரியம் ஏற்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சியால் சோகம்
பின்னர் அதை சமாளித்துக் கொண்டு நடக்கிறது. உடனே ரெண்டு அடி எடுத்து வைத்தவுடன் திடீரென கீழே விழுந்தது. தும்பிக்கை துடிக்கிறது. பாகன்கள் என்னவாயிற்று என சுதாரிப்பதற்குள் துடித்துக் கொண்டிருந்த தும்பிக்கை நின்றுவிடுகிறது. உடனே அவ்வழியாக வாக்கிங் சென்றவர்களும் ஓடி வருகிறார்கள். பின்னர்தான் யானை இறந்துவிட்டது தெரியவருகிறது. புதுவையின் அடையாளமாகவும் செல்லக் குழந்தையாக பாவிக்கப்பட்ட லட்சுமி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாகவும் தங்கள் குடும்ப உறுப்பினர் இறந்தால் எப்படி ஒரு சோகம் இருக்குமோ அதுபோன்று லட்சுமி இறப்புக்கு ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அதன் உடல் இன்று மாலை முத்தியால்பேட்டை பஜனை மட வீதியில் உள்ள இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.