நாராயணசாமி முதல்வராக நீடிக்க தகுதியில்லை உடனே பதவி விலக வேண்டும் - அதிமுக எம்எல்ஏ அன்பழகன்
புதுச்சேரி: 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் பெரும்பான்மையை இழந்துள்ள முதல்வர் நாராயணசாமி உடனே பதவி விலக வேண்டும் என புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.

புதுச்சேரியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் , ஜான்குமார்ஆகியோர் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்கள் உள்ளதால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார். ஆட்சியை கவிழ்க்கும் முன்பாக ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக அம்மாநில அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியற்றவர்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டதால் தார்மீக பொறுப்பேற்று நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபையை கூட்டி நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதுச்சேரி மாநில அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.