புதுச்சேரியை புரட்டிபோட்ட நிவர்.. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை சுற்றி சூழ்ந்தது வெள்ளம்
புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடந்ததன் காரணமாக பெய்த கனமழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக நிவர் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியின் முக்கிய சாலைகளான புஸ்சி வீதி,
இந்திராகாந்தி சந்திப்பு மற்றும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீரில் ஊர்ந்து செல்கின்றன. இதேபோல் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளிலும், அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் புதுவையின் மையப்பகுதிகளில் உள்ள பாரதி வீதி, புஸ்சி வீதி, பாரதி வீதி பல சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. புதுச்சேரியில் புயல் கரையை கடந்த பின்னரும் கடல்அக்ரோசத்துடன் காணப்படுகிறது. கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
