இனி ’மாஸ்க்’ கட்டாயம்.. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள்! புதுச்சேரி அரசின் அறிவிப்பு!
புதுச்சேரி : சீனா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டுள்ளது.
தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது.
சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பிஎஃப் 7
பாதிப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடகா போன்ற மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சுகாதார துறை சார்பிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பிஎஃப் 7 குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி
இது தொடர்பாக அம்மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கட்டுப்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,"உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் BF.7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்
மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள்/ஹோட்டல்கள்/பார்கள்/ மதுபான கடைகள்/ விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது.

கடும் கட்டுப்பாடுகள்
மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொது அனைத்து மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

100% தடுப்பூசி
அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications