முதல்வர் விஜய்யை பார்க்க வந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் அறையில் பூட்டி வைப்பு? ஜவாஹிருல்லா ஆவேசம்
புதுக்கோட்டை: முதல்வர் விஜய்யிடம் மனு அளிக்க வந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளரும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான கே எம் சரிப்பை மூன்று மணி நேரம் அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் பூட்டி வைத்ததாக புகார் எழுந்தது. இது மோசமான அத்துமீறல் என்றும், ஜனநாயக விரோதப் போக்கு என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,"புதுக்கோட்டையில் முதலமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைப்பது தொடர்பாக சென்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் புதுக்கோட்டை கே எம் சரிப் அவர்களை நேற்றைய தினம் அரசு அலுவலகத்திற்குள் வைத்து அதிகாரிகள் பூட்டிவிட்டுச் சென்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் இவர் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.

சுமார் மூன்று மணி நேரம் அலுவலகத்திற்குள் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வந்த பிறகு தான் அலுவலகத்தைத் திறந்து அவரை வெளியே அனுமதித்துள்ளனர் என்ற தகவல், அரசு நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் மனிதநேயமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.
கே எம் சரிப் எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் ஈடுபடவில்லை. பொதுமக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் முதல்வரைச் சந்திக்கச் சென்றுள்ளார். முதல்வரை சந்திக்க இயலாது என்று நாகரிகமாகத் தெரிவித்திருக்கலாம். ஆனால், அவரை மூன்று மணி நேரம் அலுவலகத்திற்குள் பூட்டி வைப்பதற்கான அதிகாரத்தை அரசு அதிகாரிகளுக்கு யார் வழங்கியது?
முதலமைச்சருடம் மனு அளிக்கச் செல்லும் ஒருவர், தனது அடிப்படை மனித உரிமையையும் தனிமனித சுதந்திரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
குறிப்பாக, முதலமைச்சரின் வருகையையொட்டி கோரிக்கைகளை முன்வைக்கச் சென்ற தலைவர் ஒருவருக்கு இத்தகைய அவமதிப்பு நேர்ந்திருப்பது, ஜனநாயகத்தில் மக்களின் குரலுக்கு அரசு நிர்வாகம் அளிக்கும் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார், எந்த உத்தரவின் அடிப்படையில் அந்தத் தலைவர் அலுவலகத்திற்குள் பூட்டி வைக்கப்பட்டார், மூன்று மணி நேரம் அவரை வெளியே விடாமல் தடுத்ததற்கான காரணம் என்ன என்பவை வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுப்பதற்குப் பதிலாக, கோரிக்கை வைக்க வருபவர்களையே பூட்டி வைக்கும் அதிகாரப் போக்கு ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது. அரசு அதிகாரம் என்பது மக்களை அச்சுறுத்துவதற்கானது அல்ல; மக்களுக்குச் சேவை செய்வதற்கானது என்பதை அதிகாரிகளுக்கு உரிய வகையில் உணரத்தப்பட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
