பஸ் படியில் பயணம்..ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் புதுக்கோட்டை மாணவர்கள்.. இறக்கி விட்ட நடத்துனர்
புதுக்கோட்டை: பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை அடுத்து புதுக்கோட்டையில் படிக்கட்டில் தொங்கி கொண்டு வந்த மாணவர்களை இறக்கிவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை எடுத்துச் சென்றனர்.
பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். அடிக்கடி படியில் இருந்து கீழே விழுந்து காயம் படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு மதுரையில் 9ஆம் வகுப்பு மாணவன் பிரபாகரன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கலங்கச் செய்யும் சம்பவம் நடந்தேறியது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, அரசுப் போக்குவரத்து கழக பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் படியில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்களை "படியில் பயணம் செய்யமாட்டோம்" என்று உறுதி மொழி ஏற்க செய்யும் பணியில் காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

படியில் பயணம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து மாங்கோட்டை நம்பம்பட்டி செம்பட்டி விடுதி வழியாக கறம்பக்குடி செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

ஆபத்தான பயணம்
இதுகுறித்து பல மாதங்களாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று ஆலங்குடியில் இருந்து நம்பம்பட்டி செம்பட்டி விடுதி வழியாக கறம்பக்குடி சென்ற அரசு பேருந்தில் அதிக அளவிலான மாணவர்கள் பயணித்தனர். இதனால் பேருந்தில் இடம் இல்லாமல் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவறே ஆபத்தான முறையில் பயணித்தனர்.

இறக்கி விட்ட நடத்துனர்
இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் பேருந்து ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே வந்த போது கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர். மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது குறித்து நடத்துநரிடம் சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூடுதலாக படிக்கட்டில் தொங்கி கொண்டு வந்த மாணவர்களை இறக்கிவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை எடுத்துச் சென்றனர்.

பரிதவித்த மாணவர்கள்
இதனால் பாதி வழியில் பரிதவித்த மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து மீண்டும் அவ்வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏறி பயணித்தனர். போதிய பேருந்து இல்லாததால் மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் இனிமேலாவது ஆலங்குடி போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு தனி பேருந்து
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பல ஊர்களில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றன.
மகளிருக்கு இலவச பயணம் என்று ஸ்டிக்கர் ஒட்டியது போல பள்ளி செல்லும் நேரங்களிலும் பள்ளி விடும் நேரங்களிலும் மாணவர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசும் போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்குமா?












Click it and Unblock the Notifications