பசும்பொன் விழாவில் காலணிகளை காக்க காவலர்களா? சர்ச்சையான அதிகாரிகளின் ஆர்டர்! தீயாய் பரவும் போட்டோ!
இராமநாதபுரம் : பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் நபர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களை நியமித்து அதிகாரிகள் வெளியிட்டதாக உத்தரவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றிருக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழாவானது கடந்த 28 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி காலை 9 மணி முதலே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகம் வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்! பின்னணி?

தேவர் குருபூஜை
தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தி உள்ள அவரது சிலைக்கும், பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, மூர்த்தி,ஐ. பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பலரும் மரியாதை
தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், ஓ பன்னீர்செல்வம் தரப்பு, பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இராமநாதபுரம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், முளைப்பாரி எடுத்து வந்தும், அலகு குத்தியும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பலத்த பாதுகாப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகள் விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதன் காரணமாக தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. இது மட்டுமல்லாது சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலணிகளை காக்க காவலர்கள்
இந்நிலையில் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் நபர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களை நியமித்து அதிகாரிகள் வெளியிபட்டதாக உத்தரவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றிருக்கிறது. காவலர்கள் மட்டுமல்லாது அளவர், கிராம உதவியாளர்கள், பேரூராட்சி பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கமுதி வட்டாட்சியர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் நபர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியில் காவலர்கள் குறுவட்ட அளவர் கிராம உதவியாளர் பேரூராட்சி பணியாளர்கள் என 11 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் இரு நாட்களுக்கு இரு பிரிவாக அவர்கள் பணியில் அமர்த்த பட்டுள்ளதாக அந்தர உத்தரவில் கூறப்பட்டுள்ளது அவர்களது தொலைபேசி எண்ணும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இந்த உத்தரமானது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.