மாவட்டச் செயலாளர் Vs மந்திரி! ராமநாதபுரம் மாவட்ட திமுக குஸ்தி! திண்டாடும் நிர்வாகிகள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திற்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையேயான பனிப்போர் ஓய்ந்தபாடில்லை.
இதனால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் யார் பக்கம் நிற்பது, யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் பொதுவான நிர்வாகிகள் திண்டாடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் கூட இருவரும் எதிரெதிர் பக்கங்களில் தான் இருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். அமைச்சர் தங்கம் தென்னரசு குடும்பத்தினருக்கு தூரத்து உறவினர் குடும்ப நண்பர் என்று கூட இவரை சொல்லலாம். அந்தளவுக்கு அவருடன் நெருக்கம் காட்டக் கூடியவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற முத்துராமலிங்கம், மாவட்ட பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார்.

அமைச்சர் பதவி
ஆனால் அந்த மாவட்ட பிரதிநிதித்துவ கோட்டாவில் முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்றி பெற்ற ராஜகண்ணப்பனுக்கு அமைச்சராகும் யோகம் கிடைத்தது. அப்போது முதலே மாவட்டத்தில் யார் கை ஓங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்தப் பனிப்போர் சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளிலும் எதிரொலித்ததை காண முடிந்தது.

எதிரெதிர் பக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இருவரும் ஒன்றாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டாலும் கூட ஒருவருக்கு ஒருவர் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. அதேபோல் நடுநாயகமாக அமைச்சர் அன்பில் மகேஷை நிறுத்தி மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கமும், அமைச்சர் ராஜகண்ணப்பனும் எதிரெதிர் பக்கங்களில் நின்று கொண்டனர்.

பொதுவான நிர்வாகிகள்
ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் இருவருக்குமே தனித் தனி ஆதரவாளர்கள் வட்டம் இருக்கிறது என்றாலும் கூட, எந்த அணியையும் சாராத நூற்றுக்கணக்கான பொது நிர்வாகிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பாடு தான் திண்டாட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யார் பக்கம் நிற்பது, யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் அமைச்சருக்கும், மாவட்டச் செயலாளருக்கும் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications