மனைவி மீது சந்தேகம்.. தீ வைத்து கொன்ற கணவணுக்கு ஆயுள்.. ராமநாதபுரம் கோர்ட் உத்தரவு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி மனைவியை உயிரோடு எரித்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது
2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் வழங்கியது.
அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே கிழக்கு தொழுளுர் பட்டியை சேர்ந்தவர் தருமர். இவர் இதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். தருமர், பஞ்சவர்ணம் தம்பதிக்கு 5 பெண் குழந்தைகளும் ஆறாவதாக ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
கள்ளம் கபடமில்லாத பஞ்சவர்ணம் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பேசும் பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது.

மனைவி பேசுவதற்கு எதிர்ப்பு
இதனால் பஞ்சவர்ணம் ஆண்களுடன் பேசுவது தருமருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆண்களுடன் தேவையில்லாமல் பேசக்கூடாது என பஞ்சவர்ணத்தை அடிக்கடி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் தன்னுடைய பேச்சை கேட்காததால் பஞ்சவர்ணத்தின் நடத்தையில் கணவர் தருமருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனைவிக்கு தீ வைத்த கணவர்
ஒருநாள் இருவருக்குமிடையே இந்த விவகாரம் முற்றிவிட பஞ்சவர்ணத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் கணவர் தருமர். இதை அடுத்து தீக்காயங்களுடன் அபிராமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பஞ்சவர்ணம். அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவர் தருமரை போலிசார் கைது செய்தனர். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் தருமர். பின்னர் பஞ்சவர்ணம் 6 குழந்தைகளை தவிக்கவிட்டு உயிரிழந்தார். தற்போது இந்த 6 குழந்தைகள் உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வருவதாக தெரிகிறது.

ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்ததாக மனைவியை எரித்துக் கொலை செய்த தருமருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் அபராதமாக நீதிமன்றத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி சுபத்ரா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications