சவுதி அரேபியா எண்ணெய் கிடங்கில்.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்! பயங்கர தீ விபத்து
ரியாத்: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காதீங்க..இந்தியாவுக்கு போலி மிரட்டல் விடும் மேற்கத்திய நாடுகள்.. ஆனால் உண்மை?

டிரோன் தாக்குதல்
உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான அரம்கோ செங்கடல் நகரில் பல சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து, டிரோன் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் யாராவது உயிரிழந்துள்ளனரா அல்லது காயமடைந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இது தொடர்பாக ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம். ஜெட்டாவில் அரம்கோ நிறுவல் (மற்றும்) ரியாத்தில் முக்கிய நிறுவனங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி உள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 1 போட்டிகள்
வரும் மார்ச் 27ஆம் தேதி ஃபார்முலா 1 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் இந்த டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. ஃபார்முலா 1 போட்டி நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் கரும் புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஃபார்முலா 1 போட்டியின் பயிற்சி ஒட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அந்தச் சமயத்தில் தான் இந்த டிரோன் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பெரும் தீ விபத்து
இந்தச் சம்பவம் தொடர்பாக சவூதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமும், அரசு ஊடகமும் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. ஜெட்டா எண்ணெய் கிடங்கில் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலால் வடக்கு ஜெட்டா பல்க் ஆலையில் தீப்பற்றி எரிந்து நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதை அணைத்துள்ளனர். சவுதி அரேபியா இதுவரை நடந்த தாக்குதல்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.