சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் 'பிரதர்'.. 'அதை' மட்டும் பண்ணிடுங்க.. 'நேஷ்னல்' லெவலில் தட்டித் தூக்க ஸ்டாலின் 'ஐடியா'

Google Oneindia Tamil News

சேலம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அதில், வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் நம்முடைய வேட்பாளர்களை ஆதரித்து நடந்து கொண்டிருக்கும் இந்தத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ராஜேந்திரன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சின்னதுரை அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்.

 உரிமையோடு வந்துள்ளேன்

உரிமையோடு வந்துள்ளேன்

அதேபோல், சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சரவணன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், கெங்கவல்லி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சகோதரி ரேகா பிரியதர்ஷினி அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சம்பத்குமார் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.எம்.ராஜேஷ் குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் டாக்டர் ஏ.கே.தருண் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் உங்களைச் சந்திக்கின்ற ஸ்டாலின் இவன் அல்ல, எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பவன் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

 அடிபணிந்து கிடக்கும் ஆட்சி

அடிபணிந்து கிடக்கும் ஆட்சி

நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு நான் ஆதரவு கேட்கும் அதே நேரத்தில், அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நானும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. எனவே இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சராக உட்கார முடியும். எனவே இவர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த பத்தாண்டு காலமாகத் தமிழ்நாடு பாதாளத்திற்கு போயிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஐம்பதாண்டுகாலம் இந்தத் தமிழகம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்களது மறைவிற்குப் பிறகு பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு - மோடிக்கு - அமித் ஷாவிற்கு அடிபணிந்து கிடக்கும் ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட்டைக் கொண்டு வந்து உள்ளே நுழைத்து விட்டார்கள். புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து கல்வியைப் பாழாக்கி இருக்கிறார்கள். தாய்மொழியாம் நம்முடைய தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் வேதனையோடு எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

 கமிஷன் ஆட்சி

கமிஷன் ஆட்சி

எனவே தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்ல, நாங்கள் எல்லாம் வெற்றி பெற்றுப் பொறுப்பில் உட்கார வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்தத் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக, நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக, நாம் இழந்திருக்கும் உரிமையை நிலை நாட்டுவதற்காக, பத்தாண்டுகாலத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பதற்காக, நடைபெறவிருக்கும் தேர்தல் என்பதை நீங்கள் தயவு கூர்ந்து உணர்ந்தாக வேண்டும். பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும் அவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் பணம் தான் - ஊழல் தான் - கரப்ஷன் தான் - கமிஷன் தான் - கலெக்ஷன்தான். காவிரி உரிமையைத் தர முடியாத மத்திய அரசு, அந்த உரிமையைத் தட்டிக் கேட்க முடியாத தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அரசு. அதனால் தமிழகம் பாழ்பட்டு போயிருக்கிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினா, கூடங்குளம் போன்ற அணு உலைகள். சேலம் எட்டு வழிச் சாலை. இவையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் இரசாயன தாக்குதலாக அமைந்து இருக்கிறது.

 பாஜக சதிவேலைகள்

பாஜக சதிவேலைகள்

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வைக் கொண்டுவந்தது, மத்திய அரசு பணிகளில் தமிழில் பேசக்கூடாது, தமிழகப் பணிகளில் வட மாநிலத்தவரை கொண்டு வந்து நுழைப்பது இவையெல்லாம் கலாச்சார தாக்குதல்கள். எனவே இந்த இரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நம்மீது நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த இராசாயனத் தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் எதிர்க்கும் ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை இங்கு அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். அ.தி.மு.க.வால் முடியவே முடியாது என்பதைக் கடந்த ஐந்து வருடங்களாக நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற முடியவில்லை. அதனால் அ.தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடக்கும் எல்லா விஷயமும் பா.ஜ.க.வின் சதிவேலைகள் என்பதை அடிக்கடி டெல்லியிலிருந்து பா.ஜ.க.வின் தலைவர்கள் வந்து போகும் காட்சியைப் பார்க்கும் போது நமக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.

 இரண்டு வேண்டுகோள்

இரண்டு வேண்டுகோள்

பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் அவருடைய பினாமிகளின் வீடுகளில் சோதனை நடந்தது. தலைமைச்செயலகத்தில் சோதனை நடந்தது. டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்தது. பழனிசாமி அவர்கள் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அந்த இணக்கமான உறவை வைத்திருக்கின்ற காரணத்தினால் தான் தேவையான நிதியை மாநில அரசு பெற்றிருக்கிறது என்று ஒரு அபாண்டமான பொய்யை, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகக் கூறிக் கொண்டிருக்கிறார். வர்தா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி 22,573 கோடி ரூபாய். ஆனால் வந்தது 266 கோடி ரூபாய். ஒகி புயல் வந்த நேரத்தில் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்ட நிதி 9,302 கோடி ரூபாய். ஆனால் வந்தது 133 கோடி ரூபாய். கஜா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி 17,899 கோடி ரூபாய். ஆனால் அவர்கள் கொடுத்தது 1,145 கோடி ரூபாய். அதே போல, நிவர் புயல் நிவாரணம் கிடைத்ததா? புரெவி புயல் நிவாரணம் கிடைத்ததா? ஜி.எஸ்.டி. மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொகை வந்ததா? 15-வது நிதிக்குழுவின் முரண் நீக்கப்பட்டதா? கொரோனா காலத்தில் வர வேண்டிய நிதியாவது வந்ததா? எதுவும் இல்லை. பிறகு எதற்குக் கூட்டணி? என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். இங்கு நான் இரண்டு வேண்டுகோளை எடுத்து வைக்க விரும்புகிறேன்.

 ஒரு தொகுதியில் கூட

ஒரு தொகுதியில் கூட

இங்கே இளம் தலைவர் ராகுல் அவர்கள் வந்திருக்கிறார்கள். அவரிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பான வேண்டுகோள் அல்ல; உரிமையான வேண்டுகோள். அவரிடத்தில் தொலைபேசியில் பேசும் போது சில நேரங்களில், சார்... சார்... என்று பேசுவேன். அவர் உடனே மறுப்பார். இனிமேல் என்னை சார் என்று கூப்பிட கூடாது. 'பிரதர்' என்றுதான் கூப்பிட வேண்டும். ஒரு சகோதரனாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். எனவே சகோதரர் ராகுல் அவர்களே... உங்களுக்கு ஒரு உரிமை கலந்த அன்பான வேண்டுகோள். இன்றைக்கு இந்தியா ஒரு மதவாத பாசிச கும்பலிடம் மாட்டி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த இந்தியாவைக் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது இப்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலாக இருந்தாலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்து இருக்கிறது. அவ்வாறு சேர்ந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெற முடியவில்லை என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

 சார்ஜ் எடுங்க

சார்ஜ் எடுங்க

அதே போல சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பா.ஜ.க. வாஷ் அவுட் என்ற நிலைதான். ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் 37 சதவிகிதம்தான். 37 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்றால் 63 சதவிகித மக்கள் அந்த பா.ஜ.க.வை எதிர்த்து, பிரித்துப் வாக்களித்துள்ளார்கள். பல்வேறு கட்சிகளுக்குப் பிரித்துப் போட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. அதனால் சகோதரர் ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்கிறேன். நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக மத்தியில், இந்திய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் பணிகளில் நீங்கள் இறங்கிட வேண்டும் என்று இங்குள்ள அனைவரின் சார்பிலும், விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்று சொன்னாலும் அவருடைய உணர்வுகள், உணர்ச்சிகள், செயல்பாடுகள் அனைத்தும் நம்முடைய உள்ளத்தில் இருக்கிறது. அவரை நினைத்துக் கொண்டுதான் நாம் தேர்தல் பணிகளில் இன்றைக்கு இறங்கி நம்முடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

 அண்ணா அருகில்

அண்ணா அருகில்

அவர் மறைந்த நேரத்தில் அவருடைய உடலை, அவர் விரும்பிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம். ஆனால் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி அதற்கு அனுமதி கொடுத்ததா? தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார். அமித் ஷா அவர்கள் தொடர்பு கொண்டார். நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்பு கொண்டார். மத்தியில் இருக்கும் சில அமைச்சர்கள் தொடர்பு கொண்டார்கள். ஏதாவது எங்களால் காரியம் ஆகவேண்டுமா என்று கேட்டார்கள். நான் சொன்னேன், ஒரே ஒரு கோரிக்கைதான். மாநில அரசிடம் - முதலமைச்சரிடத்தில் ஒரு கடிதம் கொடுத்திருக்கிறோம். தலைவர் கலைஞருடைய உடலை பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்குப் பக்கத்தில் அடக்கம் செய்ய விரும்புகிறோம். அதுதான் அவருடைய கடைசி ஆசை. அவர் சாதாரணத் தலைவர் அல்ல, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். தமிழர்களுக்குத் தலைவராக விளங்கி கொண்டிருப்பவர். உலக அளவில் இருக்கும் தமிழர்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவர் தலைவர் கலைஞர். இந்த நாட்டிற்கு குடியரசுத் தலைவர்களை அடையாளம் காட்டிய தலைவர். பிரதமர்களை உருவாக்கிய தலைவர்.

 இம்மியளவு கூட

இம்மியளவு கூட

எனவே அப்படிப்பட்ட தலைவருக்கு இடம் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் மறுக்கப்படுகிறது. எனவே நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டபோது, பார்க்கிறோம்... பார்க்கிறோம்... என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, இம்மியளவு கூட மத்திய அரசு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பிரதமரும் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவில்லை. எனவே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு அண்ணாவிற்கு பக்கத்தில் ஆறடி இடம் கொடுக்க மறுத்த கயவர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்.எனவே தலைவருக்கு இடம் கொடுக்க மறுத்த அவர்களுக்கு இனிமேல் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? என்ற அந்தக் கேள்வியை உங்களிடம் எடுத்து வைத்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்" என்று தனது உரையை முடித்தார்.

English summary
DMK Chief mk stalin full speech in salem public meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X