வன்னியர்களின் 40 ஆண்டு கனவை நிறைவேற்றியது யாரு, நாங்கதானே... எடப்பாடியார் பெருமிதம்!
சேலம்: மற்ற கட்சிகள் முதலில் தேர்தல் அறிக்கையை கொடுத்துவிட்டு, வெற்றி பெற்றால் நிறைவேற்றுவார்கள். ஆனால் அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும் போதே திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பதிவாவதை நிர்வாகிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
வன்னியர்களின் 40 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில் 10.5 % இட ஒதுக்கீட்டை அறிவித்த அரசு அதிமுக அரசு தான் என்றும் முதல்வர் பேசினார்.

மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் எங்கு சென்றாலும் மக்கள் பாராட்டும் வகையில் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வன்னியர் இட ஒதுக்கீடு
வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பதிவாவதை நிர்வாகிகள் உறுதிசெய்ய வேண்டும். மற்ற கட்சிகள் முதலில் தேர்தல் அறிக்கையை கொடுத்துவிட்டு அவர்கள் வெற்றி பெற்றால்தான் அதனை நிறைவேற்றுவார்கள். ஆனால் அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும் போதே மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி உள்ளது. வன்னியர்களின் 40 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில் 10.5 % இட ஒதுக்கீட்டை அறிவித்த அரசு அதிமுக அரசு தான் என்று முதல்வர் பேசினார்.

பாமக வேட்பாளர்கள் பங்கேற்றனர்
முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் பாமக வேட்பாளர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிர்வாகிகள் அனைவரும் உள்ளே அனுமதிக்கபட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த பாஜகவின் ஆலோசனை கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட பாஜகவினர் மட்டுமே முதலில் அழைக்கப்பட்டனர்.

பாஜகவினர் எதிர்ப்பு
இதற்கு மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து அனைவரையும் ஒன்றாக அழைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகர மாவட்ட பாஜக வினர் கூட்டத்தில் பங்கேற்க மறுத்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தனர்.