சேலம் அருகே மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க 12 லட்சம் மானியம்.. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம்: மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பல மாம்பழ விவசாயிகள் மரங்களில் இருந்து பறிக்காமல் அப்படியே விடும் நிலை இருக்கிறது. மாம்பழத்தை பறித்து விற்பனைக்கு கொண்டு சென்றாலும் மிக குறைந்த விலைக்கே எடுக்கிறார்கள்.. இதனால் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொழிற்சாலை அமைக்க அரசு மானியமாக மட்டும். 12 லட்சத்து 25 ஆயிரம் தர உள்ளதாக கூறியுள்ளது.
சேலம் பகுதியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிகம் மாம்பழம் விளையும் பகுதியாக இருக்கிறது. சேலம் என்றால் மாங்கனிகளின் நகரம் என்று அழைக்கலாம். இந்தியாவில் எங்கு மாம்பழம் விளைந்தாலும் சேலத்து மாம்பழத்தின் ருசி அளவிற்கு வராது. ஏனெனில் சேலம் மாம்பழம் அந்த அளவிற்கு ருசியானது.

சேலம் பகுதியில் மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை ஆகிய ரகங்கள் சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனிகள் ஆகும். இந்த மாம்பழங்கள் வரகம்பாடி, வாழையடித்தோப்பு, செட்டிச்சாவடி பகுதியில் விளைகின்றன. இதேபோல் வீரக்கல், சோரகை, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களிலும் அதிகப்படியாக மாம்பழம் விளைகின்றன.இந்த ஆண்டு மாம்பழத்திற்கு உரிய விலை இல்லை.. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி, கொங்கணாபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் மாங்கனி சாகுபடி செய்துள்ளனர். இதில் சங்ககிரி, தேவூர் சுற்றுவட்டாரத்தில் 1,500 ஹெக்டேரும், கொங்கணாபுரம் வட்டாரத்தில் 400 ஹெக்டேரும் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது, இதில் அல்போன்சா, பெங்களூரா போன்ற ரகங்கள் மாம்பழ கூழ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இமாம்பசந்த், மல்கோவா, பங்கனப்பள்ளி, சேலம் பெங்களூரா போன்ற பழங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு அதிகமான மா உற்பத்தி மற்றும் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக மாம்பழம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் சங்ககிரி, தேவூர், கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சங்ககிரி, கொங்கணாபுரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள அல்போன்சா, பெங்களூரா ரகங்களில் இருந்து பழக்கூழ் தயாரித்து வெளி மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்ப முடியும். இந்த தொழிற்சாலை அமைக்க ரூ.35 லட்சம் வரை செலவாகும். இதற்கு மானியமாக ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை சங்ககிரி, கொங்கணாபுரம் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பெற்று கொள்வதுடன், மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க மானியம் பெற்று பயன் அடையலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications