கோயில்களில் அதிகம் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவுகிறது.. அதனால் தான் தடை நீட்டிப்பு.. அமைச்சர் மா.சு
சிவகங்கை: ஆடி மாதம் கோயில்களுக்குப் பக்தர்கள் அதிகளவில் வருவதால் கொரோனா பரவுவது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்தே, ஊரடங்கு அறிவிப்பில் கோயில்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை மே மாதத்தில் உச்சம் தொட்டது. இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் வைக்க மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதல் இரண்டு வாரங்கள் எந்தவொரு தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர், வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதும் ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

கோயில்கள்
கடந்த மாதம் கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் ஜூன் இறுதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆடி மாதம் என்பதால் கூட்டத்தை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் பல்வேறு தளர்வுகள் இடம் பெற்றிருந்த நிலையிலும் கூட கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

அமைச்சர் விளக்கம்
தமிழக அரசின் இந்த முடிவுக்குச் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் காணல் அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்ட 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மதகுபட்டி கிராமத்தில் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

வேக்சின் பணிகள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்குச் செலுத்துவதற்காக மத்திய அரசிடம் ரூ 99.84 கோடி கொடுத்து 29.22 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளோம். இது தவிர 2.69 கோடி கொரோனா வேக்சின்களை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியது. தமிழ்நாட்டில் இதுவரை 2.80 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வேக்சின் போடக் கூடுதலாக 12 கோடி தடுப்பூசிகள் தேவை. ஆனால், மாநிலத்தில் இப்போது கையிருப்பாக வெறும் 15 லட்சம் வேக்சின்கள் மட்டுமே உள்ளது.

ஏன் அனுமதி இல்லை
ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் கோயில்களுக்குச் செல்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த முடியாததால் வைரஸ் பரவுவது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. இது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. மருத்துவ வல்லுநர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையிலேயே கோயில்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது.
Recommended Video

பள்ளிகள் திறப்பு
18 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு வேக்சின் கொள்முதல் குறித்து மத்திய அரசு இதுவரை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை. மத்திய அரசு அதை வெளியிட்ட பிறகு நேரடியாகக் கொள்முதல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக வேக்சின் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறக்கப்படும் போது கொரோனா பரவாது என நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications