காத்திரு பகையே! இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. சுள்ளான் மதன் கொலை பின்னணி.. அதிகரிக்கும் புதிய கலாச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான 'சுள்ளான் மதன்' (வயது 26) என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஆனால், இந்தக் கொலையை விடவும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது சமூக வலைதளங்களில் நடக்கும் மோதல்கள்தான்.

ஒரு கொலையை வீடியோவாகப் பதிவிட்டு கொண்டாடுவது, அதற்குப் பதிலடியாக "அடுத்து உங்கள் முறை" "காத்திரு பகையே" என சவால் விடுவது என இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் பழிவாங்கும் களமாக மாறியுள்ளது.

Sivaganga Horror

கரும்புத் தோட்டத்தில் நடந்த பயங்கரம்

சிவகங்கை அருகே உள்ள ஒக்கூரை அடுத்த பகுதியில் கடந்த அக்டோபர் 18-ம் தேதி மதன் நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களுடன் வந்த 11 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் மதன் ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்ற அந்தக் கும்பல், அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்ட சிவகங்கை நகரக் காவல்துறை, பிரதீப் (26), பாலமுருகன் (19), பாபு (23) ஆகிய மூன்று பேரை அடுத்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்தது. தலைமறைவாக உள்ள மற்ற எட்டு பேரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யார் இந்த சுள்ளான் மதன்?

கொல்லப்பட்ட சுள்ளான் மதன் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 15 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2024-ம் ஆண்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது ஏற்பட்ட தகராறில், ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் என்ற இரு சகோதரர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக மதன் சேர்க்கப்பட்டார்.

வழக்கறிஞர் போல வேடமணிந்து நீதிமன்றத்தில் சரணடைந்த மதன், குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவரை சிவகங்கை வட்டாட்சியர் மூலம் ஓராண்டு நன்னடத்தை பிணையில் காவல்துறை கண்காணித்து வந்தது. சமீபத்தில் அக்டோபர் 1 அன்று மற்றொரு வழக்கில் கைதாகி, அக்டோபர் 7 அன்று ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் வெடித்த போர்க்களம்

மதன் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, எதிர் தரப்பினர் அவரது உடலின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "கேம் ஓவர்" என்றும், "பார்ட்-1 முடிந்தது, அடுத்து பார்ட்-2 ஆரம்பம்" என்றும் ஸ்டோரி போட்டு கொண்டாடினர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதனின் ஆதரவாளர்களும் சும்மா இருக்கவில்லை. "கொலைகள் தொடரும், தலைகள் உருளும்", "விரைவில் அனைத்து தலைகளும் சிதறும்", "இனிமேதான் சம்பவமே ஆரம்பம்" என ஆக்ரோஷமான வசனங்களுடன் ரீல்ஸ்களை பதிவேற்றினர். மதனின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று கூறி சில நபர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் சிவகங்கை வட்டாரத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.

2021-ல் தொடங்கிய இன்ஸ்டா கொலை கலாசாரம்

சிவகங்கை பகுதியில் உள்ள சில இளைஞர்கள் மத்தியில் இந்த இன்ஸ்டாகிராம் கலாசாரம் நேற்று இன்று உருவானது அல்ல. கடந்த 2021-ம் ஆண்டு வழக்கறிஞர் அக்னிராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்தே இது ஒரு தொடர்கதையாகிவிட்டது. அக்னிராஜின் மறைவுக்குப் பிறகு அவரது நண்பர்கள் 'அக்னி பிரதர்ஸ்' என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினர்.

அதில் யார் யாரைக் கொல்லப் போகிறோம் என்பதை வீடியோவாகப் பதிவிட்டு, அதன்படியே அடுத்தடுத்த ஆண்டுகளில் நான்கு பேரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்தனர். அதே பாணியில்தான் ஜெயசூர்யா - சுபாஷ் இரட்டைக் கொலையும் சமூக வலைதளத் திட்டமிடல் மூலம் அரங்கேற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

காவல்துறையின் அதிரடி முடக்கம்

சமூக வலைதளப் பதிவுகள் மூலம் மீண்டும் ஒரு மோதல் வெடிப்பதைத் தடுக்க சிவகங்கை மாவட்டக் காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுத்தும் செயல்பட்ட 36 இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளைக் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக தனியாக இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கையில் இருக்கும் செல்போனை வைத்து லைக்குகளுக்காகவும், தவறான ஹீரோயிசத்திற்காகவும் ரீல்ஸ் போடும் இளைஞர்கள், கடைசியில் தங்கள் எதிர்காலத்தையும் வாழ்க்கையையுமே இழந்து நிற்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே மிக மோசமான சான்றாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+