விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம்.. காரணம் இதுதானா? திருப்புவனத்தில் வியாபாரிகள் கடையடைப்பு
சிவகங்கை: திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் பைப்புகளை கொண்டு தாக்கியதால்தான் இளைஞர் உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், திருப்புவனம் மடப்புரம் கோயிலை சுற்றியுள்ள வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் பிரசித்திப்பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இக்கோயிலுக்கு மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி மற்றும் அவரது மகள் நிகிதா ஆகியோர் தரிசனத்திற்காக வந்திருக்கின்றனர்.

தாய் சிவகாமி உடல் நலம் முடியாதவர். எனவே அவர் நடப்பதற்கு கோயிலில் செக்யூரிட்டியாக பணியாற்றும் அஜித்குமார் எனும் இளைஞர் உதவியுள்ளார். தாயை சக்கர நாற்காலியில் வைத்து கோயிலுக்குள் அழைத்து சென்ற மகள் நிகிதா, காரை பார்க் செய்ய வேண்டும் என்று அஜித்குமாரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று அஜித்குமார் தெரிவிக்க வேறு ஒரு நபரை வைத்து காரை பார்க் செய்துள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, காரில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று மகள் நிகிதா போலீஸில் அவர் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருப்புவனம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். விசாரணை செக்யூரிட்டி அஜித்குமார் பக்கம் திரும்பியிருக்கிறது.
அஜித்குமார் உட்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். அதில் அஜித்குமாரை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற சிலரை வெளியில் அனுப்பிவிட்டு, தனிப்படை போலீசார் விசாரணையை தொடர்ந்ததாகவும், அப்போது அஜித்குமாருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாததால் அவரை திருப்புவனம் அரசு மருத்தவமனைக்கும், அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனையடுத்து அஜித்குமாரின் உறவினர்கள் போலீஸ் மீது குற்றம் சாட்டியுள்ளனர். போலீசாரின் அடி, உதையை தாங்க முடியாமல்தான் அஜித்குமார் உயிரிழந்ததாகவும், பிலாஸ்டிக் பைப்புகளை கொண்டு அஜித்குமார் தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பத்ரகாளியம்மன் கோயிலை சுற்றியுள்ள வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. ஆனால், இப்போது திமுக ஆட்சியில் இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications