தனித்து ரேசில் ‘தாமரை’? அண்ணாமலையால் அதிமுகவுக்கே இனி நல்ல காலம் தான்! திருமாவே சொல்லிட்டாரே?
சிவகங்கை : பாஜகவால் தான் அதிமுக தமிழக மக்களிடம் நன்மதிப்பை இழந்ததாகவும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு அதிமுகவிற்கு நல்ல காலத்தை ஏற்படுத்தி உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.
பிரதமர் மோடி தமிழகம் வந்த போது இருவரும் ஒன்றாக வரவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டதாகவும் இதனால் இருவரும் ஒன்றாகவே பிரதமர் மோடியை வரவேற்றதாக கூறுகின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்கி உள்ளது.

அதிமுக தனித்து போட்டி
பாஜக தனித்து போட்டியிட முடியுமா என மறைமுகமாக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் தனது தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்றுக் கொண்டாலும் கட்சிக்கும் தன்னையே தலைமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தொல் திருமாவளவன்
இந்நிலையில் பாஜகவால் தான் அதிமுக தமிழக மக்களிடம் நன்மதிப்பை இழந்ததாகவும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு அதிமுகவிற்கு நல்ல காலத்தை ஏற்படுத்தி உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக விலக்கப்பட்டால் மேலும் சில கட்சிகள் இணையும் என கூறப்பட்ட நிலையில், திருமாவளவனின் பாராட்டு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதனால் அதிமுக மெகா கூட்டணி குறித்த பேச்சுகளும் தீவிரமாகி வருகிறது.

பாஜக
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"பாஜகவால்தான் அதிமுக தமிழக மக்களிடம் நன்மதிப்பை இழந்தது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது விலைவாசி ஏற்றத்திற்கு விளக்கம் சொன்னார்கள். இப்போது எதிர்க்கட்சியாக இருப்பதை காட்டிக்கொள்ள போராட்டம் நடத்துகிறார்கள். டிசம்பர் 12ஆம் தேதி அம்பேத்கரை அவமதிப்பு செய்த பாஜகவினரை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து அம்பேத்கரை அவமதிப்பு செய்யும் பாஜகவினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதனை அளிக்கிறது
மதுரையில் விமான நிலையம் செல்லும் வழியில் டாக்டர் அம்பேத்கரின் உருவச் சிலையை திறந்து வைத்த முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான் குறித்துள்ளது அது காங்கிரஸுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதை தேர்தல் களத்தை ஆய்வு செய்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் வேதனை அளிக்கிறது. மோர்பி எனும் இடத்தில் தொங்குபாலம் இடிந்து விழுந்து 140 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. ஆனாலும் அதே இடத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது

எடப்பாடி பழனிச்சாமி
பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நியாயப்படுத்தி பேசிய பாஜகவினர் அந்த பகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இதெல்லாம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. தேர்தலில் என்ன நடக்கிறது உள்ளபடி மக்கள் வாக்களித்து தான் அவர்கள் வெற்றி பெற்றார்களா என சிந்திக்க தோன்றுகிறது. குஜராத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது நாட்டுக்கு நல்ல அறிகுறி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அண்ணாமலை கூறி இருப்பது அதிமுகவிற்கு நல்ல காலத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி திருமாவளவன் புகழ்ந்து பேசியதும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக திருமாவளவன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications