16 வருஷமாச்சு.. அந்த பெயரைக் கேட்டாலே பதறும் ஆஸ்திரேலியா.. ஸ்டீவ் ஸ்மித் தலைக்குமேல் தொங்கும் கத்தி!
லாகூர்: 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின், 16 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபியில் மரண அடி வாங்கி வருகிறது. 2013 மற்றும் 2017 ஆகிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா அணி வெல்லாத நிலையில், இம்முறை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கங்காரு பாய்ஸ் அணி வகுத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போது எவ்வளவு பரபரப்பு இருக்குமோ, அதற்கு நிகரான பரபரப்பு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டங்களிலும் இருக்கும். ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடப்பதற்கு முன்பிருந்தே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி பரம எதிரியாக வலம் வந்திருக்கின்றன. இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்திலேயே ஆக்ரோஷமாக இருப்பார்கள்.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடுகிறது. கடைசியாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி பட்டம் வென்றது. இன்னொரு பக்கம் இங்கிலாந்து அணி இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியதே கிடையாது.
இதனால் இம்முறையாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியா அணி 2013 மற்றும் 2017 ஆகிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறவில்லை. இதனால் இம்முறையாவது ஆஸ்திரேலியா கம்பேக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகி கொள்ள, பொறுப்பு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட் உள்ளிட்டோரும் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். கடைசியாக 2016 டி20 உலகக்கோப்பையில் இவர்கள் 3 பேரும் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி விளையாடியது.
அண்மையில் முடிவடைந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் கங்காரு பாய்ஸை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எப்படி கரை சேர்ப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் மிகப்பெரிய வலிமையுடன் உள்ளது. ட்ராவிஸ் ஹெட், ஸ்மித், லபுஷேன், மேக்ஸ்வெல் என்று அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஐசிசி தொடருக்கு முன்பாகவும் ஆஸ்திரேலியா அணி மோசமாக ஆடுவது வழக்கம்தான். ஆனால் ஐசிசி தொடரில் ஆஸ்திரேலியா அணி அனைவரையும் வீழ்த்தி அசால்ட்டாக கோப்பையை தட்டிச் செல்லும். இதனால் 16 ஆண்டுகளாக சந்தித்து வந்த தோல்விகளுக்கு ஸ்டீவ் ஸ்மித் இம்முறை பதில் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications