For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்திரன் பாணியில் தேர்வெழுத முயற்சி... 135 சவரன் தங்க நகைகளை சுட்ட மருத்துவ மாணவர்கள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொழிலதிபர் அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 135 சவரன் தங்க நகைகளைத் திருடிய மருத்துவக் கல்லூரி மாணவி மற்றும் மாணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

எந்திரன் பட பாணியில் தேர்வில் முறைகேடு செய்வதற்காக விலை உயர்ந்த கருவிகளை வாங்குவதற்காக இந்த நகைகளை திருடியதாக மாணவர்கள் திடுக்கிடும் தகவலை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூவில் வசிப்பவர் ஜெயக்குமார். ஹோட்டல் மற்றும் நிதிநிறுவன அதிபராக உள்ளார். இவரது சகோதரர் இல்லத் திருமணம் நடைபெற இருந்ததையொட்டி, அவரது குடும்பத்தார் அணிவதற்காக, வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 135 சவரன் நகைகளை, கடந்த வாரம் வீட்டுக்கு எடுத்துவந்து வைத்திருந்தார். அந்த நகைகள் நவீன இரும்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, வீட்டைப் பூட்டிவிட்டு, அதே வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குத் தங்கியிருக்கும், சௌமியாவிடம்(21) சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். சௌமியா காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். அன்று இரவு தொழிலதிபர் வீட்டில் இருந்த பெட்டகத்துடன் 135 சரவன் நகைகள் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து 11-ம் தேதி ஜெயக் குமார் காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டு குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்தனர்.

பிடிபட்ட மருத்துவ மாணவி

போலீஸாருக்கு மருத்துவ மாணவி சௌமியா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவரும், அவரது சக மாணவரும் காதலருமான, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிகண்டனும் (22) சேர்ந்து நகைகளைத் திருடியதை செளமியா ஒப்புக்கொண்டார்.

திருட திட்டமிட்ட மாணவர்கள்

சௌமியா, ஜெயக்குமாரின் வீட்டில் வாடகைக்கு இருந்தாலும் குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளதால், ஜெயக் குமார் நகைகளை வங்கி லாக்கரிலிருந்து கொண்டுவந்தது சௌமியாவுக்கு தெரிந் துள்ளது. ஜெயக்குமார் நம்பிக்கையுடன் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றநிலையில், சௌமியாவும் மணிகண்டனும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, நகைகளைப் பெட்டகத்துடன் திருடிச் சென்றுள்ளனர்.

காரில் சென்ற மாணவி

பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த நகைகளை ஒரு பையில் போட்டு, அவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் உள்ள தோழியிடம் சௌமியா கொடுத்துள்ளார். இந்த நகைகளை, ஜெயக்குமார் வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல, சௌமியா தனது காரை பயன்படுத்தியுள்ளார்.

நகைகள், கார் பறிமுதல்

சௌமியா அளித்த தகவலின்பேரில், காஞ்சிபுரம் வடிவேல் நகரில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்த மணிகண்டனையும் போலீஸார் வியாழக் கிழமை காலையில் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 135 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் திருட்டுக் குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சௌமியா, மணிகண்டன்

சௌமியாவின் தந்தை கோவிந்தராஜ் ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். மகளுக்கு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மணி கண்டனின் தந்தை அன்பழகன் கிருஷ்ணகிரி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

தேர்வில் தோல்வி

மணிகண்டன், கடந்த 2009-ல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவர் பல பாடங்களில் தோல்வி அடைந்ததால் 2013-14 கல்வியாண்டில் 2-ம் ஆண்டுதான் படித்து வருகிறார். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற, அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு ரூ.1.50 லட்சம் வழங்கினால் தேர்ச்சிபெறலாம் என்பதற்காகத்தான் திருடியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

எந்திரன் பட பாணியில்

தேர்வில் முறைகேடு செய்யத் திட்டமிட்ட மணிகண்டன் பனியன் உள்ளாடையுடன் இணைந்த நவீன கருவிகள் இரண்டை தலா ரூ.35 ஆயிரம் வீதம் ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். அவரது வீட்டில் இந்த பனியன்கள் கிடைத்துள்ளன. தடையில்லா தொடர்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்தும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன.

சிறிய ஹெட்போன், மைக்ரோ போனும் பனியனின் கழுத்துப் பகுதியில் உள்ளன. இந்த சிம்கார்டுக்கு, தேர்வு அறைக்கு வெளியில் இருப்பவர் போன்செய்வார். சத்தம் எதுவும் வராது. ஆனால் போன் செய்பவர் பேசுவது கேட்கும். கேள்வியை தேர்வு எழுதுபவர் மெல்லிய குரலில் படிப்பார். பின்னர் அதற்கான பதிலை, வெளியில் இருப்பவர் படிக்க படிக்க, தேர்வர் விடைத்தாளில் எழுதுவாராம்.

ஐஸ்வர்யாவும் ரஜினியும்

எந்திரன் படத்தில் இதே முறையை பயன்படுத்திதான் மருத்துவமாணவியான ஐஸ்வர்யாவிற்கு ரோபோ ரஜினிகாந்த் உதவி செய்வார். அதே முறையில் தேர்வெழுத கருவிகளை வாங்கவே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடியுள்ளனர். கடைசியில் போலீசில் சிக்கியுள்ளனர்.

சாவியை கொடுக்காதீங்க

எவ்வளவுதான் நன்றாக பழகியிருந்தாலும், அக்கம் பக்கம் வீட்டாரிடம் சாவியை ஒருபோதும் கொடுத்துச் செல்லவேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
Two medical students, including a girl, were arrested on Wednesday for stealing 135 sovereigns of gold jewellery and other valuables worth nearly Rs 40 lakh from a financier's house in Kancheepuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X