நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 5000 பேர் பங்கேற்ற மாரத்தான்
நெல்லை: நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 5000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்தது.
நெல்லையில் மாரத்தான் மூன்று பிரிவுகளில் தொடங்கியது. காலை 5.30 மணிக்கு ஹால்ப் மாரத்தான் எனும் 21.1 கி.மீ. தொலைவுக்கான ஓட்டம் தொடங்கியது. இதில், 425 பேர் பங்கேற்றனர்.
காலை 6 மணிக்கு 10 கி.மீ. தொலைவுக்கான ஓட்டம் தொடங்கியது. இதில், 1275 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ. தொலைவுக்கான ஓட்டத்தில் 3,400 பேர் பங்கேற்றனர்.
மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மூன்று ஓட்டங்களுமே பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

குடிநீர் - ஊட்டச்சத்து பானங்கள்
ஓடும் வீரர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர், ஊட்டச்சத்து பானங்கள், பழங்கள் வழங்கப்படும். இவை தவிர மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் தயார்நிலையில் உள்ளனர். ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இரு பாலாரும் பங்கேற்பு
மூன்று நிலைகளில் நடைபெறும் போட்டிகளில் இருபாலரும் பங்கேற்றனர். ஆனால், 10, 21.1 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்கும் நபர்களில் முதல் 3 இடம் பெறும் இருபாலருக்கும் பரிசுகள் வழங்கப்படும். ஹால்ப் மாரத்தானில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாமிடம் பெறுவோருக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாமிடம் பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

10 கிலோமீ்டர் ஓட்டம்
10.கி.மீ. தொலைவு ஓட்டத்தில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாமிடம் பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம், மூன்றாமிடம் பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

முழுமையாக முடித்தால் பதக்கம்
ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்யும் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு வீரரும் எவ்வளவு நேரத்தில், எவ்வளவு தொலைவைக் கடந்தனர் என்பதைக் கண்காணிக்கும் வகையில், வீரர்களின் டி-சர்ட்டில் சிப்
பொருத்தப்பட்டிருக்கும். இது நேரத்தை துல்லியமாகக் கணிக்கும்.

மாற்றுத் திறனாளிகளின் ஆர்வம்
காலையிலேயே தொடங்கிய இந்த மாராத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு எங்களாலும் முடியும் என்று நிரூபிக்கும் வண்ணம் கலந்து கொண்டனர். இது காண்போரை நெகிழவைத்தது.