ஓமலூர் அருகே 11-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது
சேலம்: ஓமலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 70 வயது முதியவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் பேரூராட்சியை சேர்ந்தவர் கணேசன். இவரது 11 வயது மகள் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி, வீட்டின் அருகே உள்ள பொது சுகாதார வளாகத்திற்கு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 70 வயது முதியவரான அப்பாதுரை என்பவர், பின் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி சத்தம்போடவே, அக்கம் பக்கமிருந்து ஓடி வந்த பொதுமக்கள் சிறுமியை காப்பாற்றினர். பின்னர், முதியவரை பிடித்து, தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து முதியவர் அப்பாதுரையை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"நான் எனது மனக்கட்டுப்பாட்டிற்காகவும், எதிரில் வரும் பெண்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவும் எப்பொழுதும் நடக்கும்பொழுது தலையை கீழே குனிந்தப்படி நிலத்தை பார்த்தே நடப்பேன்" என்று தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்ட நம் தேசத் தந்தை மகாத்மா "காந்தியடிகள்" பிறந்த நாடா இது? என்று வெட்கி தலைகுனிய தோன்றுகிறது.
பாலியல் குற்றங்கள் இல்லாத சமூகத்தில்தான் பெண் பாதுகாப்பாக வாழ முடியும். ஆனால் இன்றோ... மனித உருவில் இருக்கும் மிருகங்கள் பிஞ்சு பெண் குழந்தைகளை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்வதுடன் அதற்கான சட்டத்தையும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!