பாஜகவின் ‘பி’ டீம் தான் அதிமுக: ப.சிதம்பரம் தாக்கு!
சிவகங்கை: பாஜகவின் ‘பி' டீம் தான் அதிமுக என்று ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார். மேலும் கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதாவிற்கு கண்ணியமும், அடக்கமும் கிடையாது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்குகள் சேகரிக்க சிவகங்கை நகரில் பிரமண்ட பொது கூட்டததிற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
திராவிட கட்சிகளுக்கு இணையான கூட்டத்தை கூட்டியிருந்தனர் காங்கிரஸ் கட்சியினர். அதில் பேசிய ப.சிதம்பரம், கூறியதாவது: ''தமிழகத்திற்கு நிதி அமைச்சர் என்ன செய்தார் என்று ஜெயலலிதா கேட்கிறார். தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று கூட தெரியாத முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார்.

தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலம் கொண்டு வரபட்டுள்ள திட்டங்கள் ஆகாயத்தில் கட்டப்பட்ட திட்டங்கள் அல்ல. மண்ணிலும், துறைமுகத்திலும் எழுப்பப்பட்ட திட்டங்கள். ஆகாய வழியாக செல்லும் ஜெயலலிதாவிற்கு மண்ணில் எழுப்பப்பட்ட திட்டங்களை பார்க்க வாய்ப்பில்லை. அதனால் முதலில் அவர் தரை மார்க்கமாக பயணம் செய்து திட்டங்களை பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் துறைமுகங்களுக்கு மட்டும் 41 திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டும், நடைபெற்றும் வருகின்றன.
அதேபோல், மத்திய மின்சார வாரியம் மூலம் 4,250 மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யபட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் 1,828 கி.மீ சாலைகள் 11,769 கோடி ரூபாய் செலவில் போடபட்டுள்ளது.
ரயில்வே துறையிலும் தமிழகம் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை குறைத்து மதிப்பிடவில்லை. கருணாநிதிக்கு அவரது உயரம் தெரியும், அதனால்தான் அவர் அடக்கதோடு இருக்கிறார்.
கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதாவிற்கு கண்ணியமும், அடக்கமும் கிடையாது. ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய வேண்டும் என்கிறார். தூக்கி எறிய இது என்ன பளு தூக்கும் போட்டியா?.
ஜெயலலிதா கம்யூனிஸ்ட்களை கழட்டி விட்டுவிட்டார். அப்படியானால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க போகிறாரா? நான் அதனால்தான் அ.தி.மு.க.வை, பா.ஜ.க.வின் 'பி' டீம் என்று சொன்னேன்.
கிரிக்கெட்டில் பதினோரு ஆட்டக்காரர்கள் தவிர்த்து பன்னிரெண்டாவது ஆட்டகாரர் ஒருவர் இருப்பார். அதுபோல், அ.தி.மு.க. பன்னிரெண்டாவது ஆட்டன்காரராக பா.ஜ.க கூட்டணியில் உள்ளது. அந்த கூட்டணியில் எந்த கட்சி கழன்று கொண்டு போனாலும் இவர் உள்ளே சென்று விடுவார்" என்றார்.












Click it and Unblock the Notifications