
"துரைமுருகனுடன் நான்".. எல்லாம் வீரமணி செய்த வேலை.. கண்ணீர் விட்டு அழுத நிலோபர் கபீல்!
திருப்பத்தூர்: "துரைமுருகனுடன் நான் உறவினராக பழகுகிறேன் என்கிறார்கள்.. அவருடன் நான் பழகவே இல்லை.. அமைச்சர் கேசி வீரமணிதான் துரைமுருகனிடம் மாமன் மச்சான் என்று பேசுகிறார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்ட தான் செய்வாங்க.." என்று அமைச்சர் நிலோபர் கபில் கண்ணீர் மல்க கூறியுள்ளது, அதிமுக, திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வாணியம்பாடி எம்எல்ஏவாகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில்... ஆனால், வரும் தேர்தலில் இவருக்கு சீட் தரவில்லை.. வேட்பாளர் லிஸ்ட்டில் இவர் பெயர் இல்லாதது கண்டு திருப்பத்தூர் மாவட்ட மக்கள் அதிர்ந்து போயினர்..
அவருக்கு பதிலாக ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.இது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது... அதனால், அவரது வீட்டு முன்பு போராட்டமும் நடத்தப்பட்டது.. இதற்கான காரணமும் தெரியாத நிலையில், குழப்பங்களும், யூகங்களும் நிலவின.

அதிருப்தி
இந்த நிலையில், வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தார் நிலோபர் கபில்.. உண்மையிலேயே என்ன பிரச்சனை? எதற்காக சீட் தரவில்லை என்பது குறித்தெல்லாம் மனம் விட்டு பேசினார்.. அதேசமயம் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.. அந்த பேட்டி இதுதான்:

உறவு
"துரைமுருகனுடன் நான் உறவினராக பழகுகிறேன் என்று ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள்... அவருடன் நான் பழகவே இல்லை.. அமைச்சர் கேசி வீரமணிதான் அவருடன் உறவினராக பழகுகிறார்... கேசி வீரமணி துரைமுருகனிடம் மாமன் மச்சான் என்று பேசுகிறார். ஏலகிரியில் துரைமுருகனை சந்தித்து கான்ட்ராக்ட் ஒப்பந்தம் பற்றி பேசினார்...

துரைமுருகன்
துரைமுருகன் ஜெயிப்பதற்காக காட்பாடியில் ராமுவுக்கு சீட்டு கொடுத்திருக்கிறார்... அதற்கு கைமாறாக வீரமணிக்கு எதிராக தேவராஜுக்கு சீட்டு கொடுக்கப்பட்டிருக்கு. இவ்வளவும் செய்துட்டு, ஆனால் நான் திமுகவுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவரே எழுத வைத்திருக்கிறார்... வீண் பழி போட்டு என்னை கட்சியிலிருந்து எடுக்க பார்க்கிறார்.

சமாதானம்
என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மாவட்ட செயலாளர் சொல்லி இப்படி எழுதி இருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, என்னை அழைத்து பேசியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.. ஆனால் என்னையும் கேசி வீரமணியையும் அழைத்து ஜெயலலிதா சமாதானம் பேசவில்லை. ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இப்படியெல்லாம் பேசக் கூடாது.எனக்கு அம்மா கொடுத்த பதவி இது... நான் என் கட்சியை எப்போதுமே விட்டுக் கொடுக்கமாட்டேன்.

கூட்டணி
24 ஆயிரம் வாக்குகள் வாணியம்பாடியில் கிடைக்கவில்லை உண்மைதான்... என்ன செய்றது? சமுதாயத்தினர் வாக்கு செலுத்தவில்லை என்றால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்ட தான் செய்வாங்க.. இந்த ஊருக்காக கட்சிக்காக 20 வருஷம் சேவை செய்துட்டு வருகிறேன். 1991ல் தான் நான் அதிமுகவில் சேர்ந்தேன்... அப்போது இருந்த அமைச்சர் இந்திரகுமாரி தெரியும்.

வாணியம்பாடி
2 முறை நகர மன்ற தலைவராக இருந்தேன். அப்போது இஸ்லாமியர்கள் தானே எனக்கு வாக்களித்தார்கள்? அப்போது இஸ்லாமியர்களைப் பற்றி யாரும் பாராட்டி பேசவில்லையே? வாணியம்பாடி பகுதியில் உள்ள நியூ டெல்லியில் கவுன்சிலராக வெற்றி பெற்றேனே.. அங்கு எல்லாரும் இஸ்லாமியர்கள் தானே? அப்போது நான் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றி பெறவில்லையா? இஸ்லாமியர்கள் ஓட்டு போடவில்லை ஓட்டு போடவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். ஏன் அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை.

வன்னியர்
அவருடைய சமுதாயத்தை அவர் உயர்த்திக் கொள்ளட்டும்.. வேண்டாம்ன்னு சொல்லல.. ஆனால், இப்போது வழங்கியுள்ள பதவிகள் எல்லாவற்றிலும் அனைத்து செயலாளர்களும் வன்னியர்தான் இருப்பார்கள். முதலியார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? முஸ்லிம்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஆதிதிராவிடர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்று சின்ன சின்ன சாதிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்று பாருங்கள்.

விசுவாசம்
தலைமை சரியாகத்தான் இருக்கு.. ஆனால் மாவட்ட செயலாளர் சரியில்லை... திமுகவுடன் மாமா மச்சான் உறவு வச்சிருக்கிறார்... இன்னைக்கு கூட மீட்டிங் நடந்தது.. ஆனால், என்னை வீரமணி அழைக்கவில்லை... நான் என் கட்சிக்கு, இரட்டை இலைக்கு விசுவாசமாக இருப்பேன்... எத்தனையோ கட்சிகள் என்னை அழைக்கிறார்கள்.. போன் மேல் போன் வருது.. ஆனால் நான் அம்மா கட்சிக்காக விசுவாசமாக இருப்பேன் என்னுடைய அண்ணன் எடப்பாடியார் என்னுடைய அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு இரட்டை இலைக்கு விசுவாசமாக இருப்பேன்" என்றார்.