For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையாதான் இப்படியெல்லாம் பேசியிருக்காரு.... இன்னமும் கட்சியிலும் நீடிக்கிறாரு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கட்சி பொதுக்குழுக்களில் ஏகமனதாகவே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்; மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள்; கீப் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என சரவெடியாக தாக்கிப் பேசியிருக்கிறார் அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையா. ஆனாலும் அவர் இன்னமும் அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பதுதான் அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது.

சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா பேசியதாவது:

ADMK Mla dares Politicians

இந்த நாட்டில் பெரிய கேடு வந்ததற்குக் காரணம் அரசியல்வாதியும், அதிகாரவர்க்கமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்ததன் விளைவுதான்.

அரசியல்வாதிகள் இன்று ஊழல் செய்யக் காரணம், அவர்களை அதிகாரிகள் வளைத்துப்போட்டு ருசி காண்பித்துவிட்டார்கள். இன்று மந்திரியும், தலைமைச்செயலாளரும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அவர்கள் எவ்வளவு பேச உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமையோடு பேசுவதற்கு உரிமை உடையவர் சரத்குமார்.

இப்போது, அமைச்சர்கள் என்றால் அடாவடித்தனம் வந்துவிடுகிறது. ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ இருக்கிறார். இன்றைக்கு, பதவிகளில் இருப்பவர்கள், தங்களுடைய கீப் வீடுகளுக்குப் போகும்போதுகூட பாதுகாப்பு வண்டிகளோடு செல்கிறார்கள். காரணம், அதுவும் பொதுப்பணிதான் என்கிறார்கள்.

எஸ்கார்ட் வண்டியையும், சர்க்யூட் ஹவுஸையும் எடுத்துவிட்டால் ஒருவரும் அமைச்சராக இருக்க விரும்பமாட்டார்கள். ஒரு கூட்டம் கூட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். இப்போது, யாருக்கும் கூட்டம் வருவது இல்லை. கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். மாவட்டம், வட்டம் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்? வாகனங்களில் கூட்டத்தை அழைத்து வரத்தானே?

எந்தப் பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் விவாதிக்கப்படுகிறது? எல்லாம் ஏக மனதாகத்தானே நிறைவேற்றம் நடக்கிறது. புருசன் பொண்டாட்டியே ஒத்துப்போகாத காலத்தில், இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்? அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும். அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய கருத்து உருவாகும். இதுதான் வளர்ச்சி. ஆனால், இங்கு எதிர் கருத்து என்பதே கிடையாது. இங்கு எந்த அரசியல் கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானத்தை விவாதிப்பது இல்லை. தீர்மானத்தைப் படிக்கிறார்கள். பிறகு எதற்கு ஜனநாயகம்? ஒரு குடைக்குள் ஆளும் மன்னர்களாகத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

சமுதாயம் சந்தைப்பொருளாகி, கடவுளையும் சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். கடவுள் நம்பிக்கை கெட்டுப் போய்விட்டது. மதங்கள் நிறுவனங்களாகிவிட்டன. உண்டியல் பணமே மந்திரிகளுக்குப் போகிறது.

அதிகார வர்க்கம் ஒத்துழைக்காமல் இவர்கள் ஓர் அணாகூட கொள்ளையடிக்க முடியாது. சுடுகாட்டில் படுத்து உறங்கும் நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாடு கெஜ்ரிவாலைத் தேடி அலைகிறது என்றால், நாடு எந்த நிலையில் உள்ளது என்று பாருங்கள்.

நல்லவன் என்று யாரைக் கண்டாலும் நாட்டை ஆளக் கூப்பிடுகிறார்கள். சங்ககாலத்தில் பா வீடு என்று உள்ளது. அதாவது, ஒரு நாட்டு மன்னன் பக்கத்து நாடு படையெடுத்து அங்கிருக்கும் ஆநிறை உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்து, அதை தனது படை வீரர்கள் முதல் ஜோதிடர் வரை பிரித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அந்த நிலை இந்த நாட்டில் மீண்டும் திரும்பியுள்ளது.

மந்திரி கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.

இவ்வளவு விமர்சித்த பின்னரும் பழ. கருப்பையா, அதிமுகவில்தான் நீடிக்கிறார். துக்ளக் ஆண்டுவிழா விழா என்பதால் அதன் ஆசிரியர் 'சோ' சங்கடப்படுவாரோ என நினைத்து பழ. கருப்பையா மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

English summary
ADMK MLA Pazha. Karuppiah slammed Politicians and Minisiters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X