ஜெயலலிதாவை அவதூறாக பேசிய கண்டக்டருக்கு மண்டை உடைப்பு... சக ஊழியர்கள் போராட்டம்
மதுரை: மேலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக நடத்துனரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடத்துனராகப் பணிபுரிந்தவர் பாஸ்கரன். இவர், கடந்த 4ஆம் தேதி திருப்பரங்குன்றம் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், மீண்டும் மேலூருக்கே இடமாறுதல் உத்தரவு பெற்ற பாஸ்கரன், வியாழக்கிழமை பணியில் சேர பணிமனைக்கு வந்தார். அப்போது, தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக பாஸ்கரனுக்கு அங்குள்ள அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதையடுத்து, பாஸ்கரன் பணிமனை மேலாளரைச் சந்திக்கச் சென்றார். இதையறிந்த அண்ணா தொழிற் சங்கத்தினர், மேலூர்-திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பணிமனையிலிருந்து வெளியே வந்த பாஸ்கரன் தாக்கப்பட்டு தலைக் காயமுற்றார். மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீஸார் பாஸ்கரனை மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, தன்னை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் 13 பேர் தாக்கியதாக மேலூர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகார் செய்தார். அதேபோல், அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த போஸ் சண்முகம் ,55, வெள்ளைச்சாமி, 51 ஆகியோர் தங்களை பாஸ்கரன் தாக்கியதாக, மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, மேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன
இதனிடையே இன்று அதிகாலை 5 மணியளவில் ஊழியரை அரசு பணிமனைக்குள்ளேயே தாக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி ஊழியர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை அரசு போக்குவரத்து கிழக்கு மண்டல மேலாளர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications