For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மழை வெள்ளப் பேரழிவுக்கு ஜெ., தலைமைச் செயலாளர்தான் காரணம்.. அன்புமணி தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்து விடாமல் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவும், தலைமைச் செயலாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சற்றே நிம்மதி

சற்றே நிம்மதி

வரலாறு காணா மழை மற்றும் வெள்ளத்திலிருந்து சென்னை நகரம் மீண்டு வரத் தொடங்கியிருப்பது சற்றே நிம்மதி அளிக்கிறது. ஆனால், இத்தனை அழிவுக்கும் காரணம் செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளில் இருந்து திட்டமிடலின்றி கண்மூடித்தனமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் எனும்போது அது பற்றி விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

முன்னெச்சரிக்கை இல்லை

முன்னெச்சரிக்கை இல்லை

சென்னையிலும், அதைச்சுற்றியுள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் எந்த ஒரு நீர்நிலையையும் கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஏரிகளின் நீர்மட்டத்தை நிர்வகித்து இருந்தால் சென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை குறைத்தியிருக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி தான். அதிலிருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால், தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன் போதிய அவகாசம் கொடுத்து வெள்ள எச்சரிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.

வெள்ள எச்சரிக்கை சரியில்லை

வெள்ள எச்சரிக்கை சரியில்லை

உதாரணமாக மேட்டூர், வைகை உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தால், அணை நிரம்புவதற்கு முன்பாக 3 முறை வெள்ள எச்சரிக்கை வெளியிடப்படும். ஆனால், அத்தகைய எச்சரிக்கையை செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளை நிர்வகிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. இது தான் முதல் தவறு ஆகும்.

அறிவுறுத்தவில்லை

அறிவுறுத்தவில்லை

டிசம்பர் முதல் தேதியன்று கடுமையான மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் வெள்ள எச்சரிக்கை வெளியிட்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் பாயும் அடையாற்றின் கரைகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியிருக்க வேண்டும். டிசம்பர் ஒன்றாம் தேதி காலை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 7500 கனஅடியாக உயர்த்தப்படலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு வெளியிட்டார். ஆனால், அச்செய்திக்குறிப்பு ஊடக அலுவலகங்களுக்கு வருவதற்கு நீர் திறப்பின் அளவு 10,000 கன அடியைத் தாண்டி விட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளிவருவதற்குள் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 34,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

60,000 கன அடி நீர் திறப்பு

60,000 கன அடி நீர் திறப்பு

அதிகாரப்பூர்வமாக இந்த அளவு கூறப்பட்டாலும், உண்மையில் வினாடிக்கு 60,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களில் பெய்த மழை நீரும் அடையாற்றில் கலந்ததால் சென்னையை தொடும்போது ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்ததாகவும், சேதம் அதிகரிக்க இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மக்களை எச்சரிக்காதது ஏன்?

மக்களை எச்சரிக்காதது ஏன்?

ஆனால், இதுகுறித்த எச்சரிக்கை மக்களுக்கு வெளியிடப்படவில்லை. அதனால் அடையாறு மற்றும் கூவம் கரைகளில் வசித்த மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக் கொண்டனர். குடிசைகளில் இருந்த உடைமைகள் அப்புறப்படுத்தப்படாததால் அவை அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகளில் இருந்தவர்கள் வெள்ளம் வருவது கூட தெரியாமல் வீதிகளுக்கு வந்த போது அடித்துச் செல்லப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையின் அலட்சியமே இதற்கு காரணமாகும்.

முதல் சுற்றிலேயே நிரம்பிய ஏரிகள்

முதல் சுற்றிலேயே நிரம்பிய ஏரிகள்

நவம்பர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இதுவரை மூன்று சுற்றுகளாக சென்னையில் பெய்திருக்கிறது. முதல் சுற்றிலேயே சென்னை மாநகர ஏரிகள் நிரம்பி கூடுதல் நீர் திறந்துவிடப்பட்டது. இரண்டாம் சுற்று மழையின் போதும் உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசை எச்சரிக்கை செய்ததாக அதன் இயக்குனர் சிவன் கூறியிருக்கிறார். இந்த எச்சரிக்கை கிடைத்த பிறகாவது ஏரிகளில் உள்ள நீரை படிப்படியாக குறைத்து அடுத்த மழையில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒரே நேரத்தில் அடையாறு ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஓடியிருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது. ஆனால், அதை செய்யத் தவறியதால் தான் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

பொறியாளர்கள் அறிக்கையை புறக்கணித்தது ஏன்?

பொறியாளர்கள் அறிக்கையை புறக்கணித்தது ஏன்?

தமிழகத்தில் பெருமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்க வேண்டும்; அப்போது தான் மழை மூலம் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை சமாளிக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அத்துறை பொறியாளர்கள் நவம்பர் 26&ஆம் தேதி அறிக்கை அனுப்பியுள்ளனர். பொதுப்பணித்துறை செயலரும் அதை தலைமைச் செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஆனால், முதல்வரின் அனுமதிக்காக காத்திருந்த தலைமைச் செயலாளர் இறுதி வரை ஏரியை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மாநகருக்கு ஏற்பட்ட பேரழிவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

விசாரணை தேவை

விசாரணை தேவை

எனவே, செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தைக் கையாளுவதில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து வெளி மாநில வல்லுனர்களைக் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அடையாற்று வெள்ள நீர் புகுந்ததால் பல வீடுகளில் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடுகளில் சேதமதிப்பை கணக்கிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
The PMK leader Anbumani Ramadoss has blamed the AIADMK government for not preparing Chennai to face such rain fury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X