குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்.. அபாய ஒலி எழுப்பி மக்கள் வெளியேற்றம்
குற்றாலம்: ஆர்ப்பரித்து கொட்டி வரும் தண்ணீரால், குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பரவலாக விழுந்த நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.

காலை 10 மணி முதல் மலை பகுதியில் மழையின் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது சிறிதாக அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய சங்கு ஒலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் வெளியேற்றினர்.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. ஆனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கோவை குற்றால அருவிக்கு செல்ல வனத்துறை ஏழாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் மாநகரப் பகுதிகளில் மழை தற்போது குறைந்து உள்ளது . சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்னும் சில தினங்களில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
