குட்நியூஸ்.. குலசையில் வரும் உலகத்தரம் வாய்ந்த ராக்கெட் ஏவுதளம்.. மயில்சாமி அண்ணாதுரை சூப்பர் தகவல்
பெரம்பலூர்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் உலகிலேயே மிக சிறந்ததாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. தமிழகத்தை சேர்ந்த இவர் தான் இந்தியாவின் சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றினார்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மயில்சாமி அண்ணதுரை நிருபர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்தும், இந்திய விண்வெளியில் தமிழகத்தின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார். மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

தமிழகம் பெரும் பங்களிப்பு
இந்திய விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது. 36 நாடுகளுக்கு சொந்தமான 340 செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தி உள்ளது. அடுத்தாண்டு இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

உலக தரத்திலான ஏவுதளம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஏவுதளம் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இந்தியாவின் துணைக்கோளான நிலவு மற்றும் செவ்வாய் கிரகம் வெகுதூரத்தில் இல்லை. மனிதர்கள் வாழ அடுத்த வாய்ப்பாக இது அமையும். நம்முடைய கல்வி உலகளாவிய தேவைகளுக்காக இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயம் முதல் விண்வெளி வரை ஏராளமான தொழிற்வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியும்'' என்றார்.

பணிகள் துவங்குவது எப்போது
ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பிறகு இந்தியாவில் குலசேகரப்பட்டினத்தில் தான் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் வேண்டும் என்று இஸ்ரோ சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து உள்ளது. மீதம் உள்ள 1,033 ஏக்கர் நிலத்தை ஓரிரு மாதங்களில் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. நிலம் ஒப்படைத்த பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளது.

எத்தனை ஏவுதளம்
இங்கு கட்டுமான பணிகளுக்கு ஒரு ஆண்டு தேவைப்படும். அதன்பிறகு ராக்கெட் ஏவுவதற்கான பணிகள் நடைபெறும். முதலில் ஒரு ஏவுதளம் அமைக்கப்படும். அதன்பிறகு தேவையை பொறுத்து இன்னொரு ஏவுதளம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications