தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்-தமிழிசை சொல்ல வருவது என்ன? திமுக மீது சவாரி செய்ய பாஜக திட்டம்?
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடியில் சென்னை வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதும் திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்திருப்பதும் பெரும் பரபரப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கபளீகரம் செய்து கொண்டது பாஜக. டெல்லியில் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த தமிழக அரசே சிக்கிக் கொண்டது.
டெல்லி என்ன நினைக்கிறதோ அதையே தமிழக ஆட்சியாளர்களும் செயல்படுத்துகின்றனர். இதனால் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பது அனைத்து கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டு.

அதிருப்தி குரல்
ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ தமிழக அரசை கடுமையாகவே விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியால் மக்களின் குரலைப் போல பாஜக தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

திமுகவுடன் நெருக்கம்
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் திமுக வெல்லும் என்கிற நம்பிக்கையில் அக்கட்சி இருக்கிறது. இதனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திமுகவை நோக்கி நகருகின்றன.

அதிமுக மீது அனுதாபம்
தேசிய அளவில் திமுகவுடன் கூட்டணியைத் தொடர காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோ திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார். அத்துடன் அதிமுகவின் அனுதாபியாக வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறார். நாளை மறுநாள் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் சென்னையில் ஸ்டாலினை பங்கேற்க வைத்து மாஸ் காட்ட விரும்பினார் திருநாவுக்கரசர். ஆனால் ஸ்டாலினோ பிடி கொடுக்காமல் தவிர்த்து வருகிறார் என்றே கூறப்பட்டு வருகிறது.

தமிழிசையின் தடாலடி பேட்டி
இந்த நிலையில் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்புக்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடியின் வருகையால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என கூறியிருந்தார்.

கருணாநிதி வீட்டில் கோஷம்
அத்துடன் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு மோடி வருவதற்கு முன்பே முதல் ஆளாக தனிநபராக போய் வாசலில் நின்று கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். அத்துடன் கணிசமாக பாஜக தொண்டர்களையும் கருணாநிதி வீட்டு முன்பாக திரள வைத்து பாரத் மாதாகீ ஜே என கோஷம் போட வைத்தார் தமிழிசை.

அன்று நடந்தது இதுதான்
பிரதமர் மோடியின் கருணாநிதியுடனான சந்திப்பு, தமிழிசையின் பேட்டி இவையனைத்துமே திமுகவை நோக்கி பாஜக நகருகிறதோ என்கிற சந்தேகங்களை எழுப்பவே செய்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தர வேண்டும் என கருணாநிதி குடும்பத்தை டெல்லி நெருக்கியது. அத்துடன் கருணாநிதி குடும்ப முக்கிய நபரை ஓபிஎஸ் சந்தித்து பேசினார் எனவும் கூறப்பட்டது.

டெல்லி நெருக்கடி?
பணமதிப்பிழப்புக்குப் பின்னர் அதிமுகவினரைத்தான் டெல்லி ரெய்டுகளால் மிரட்டியது. ஆனால் திமுகவினர் எவருமே இந்த ரெய்டுகளில் சிக்கவில்லை. இதனை முன்வைத்தே டெல்லி திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

அதிமுக அரசு மீது அதிருப்தி
கருணாநிதி குடும்பத்துடனான ஓபிஎஸ் நெருக்கத்தால் அவரது முதல்வர் பதவியே பறிபோனது. பின்னர் ஓபிஎஸ் தனி அணி மைத்ததும் ஈபிஎஸ்ஸுடன் இப்போதும் சேர்ந்திருப்பதும் அடுத்தடுத்து நடந்த நாடகங்கள். ஆனால் டெல்லி நினைத்தது போல அதிமுக அரசின் செயல்பாடுகள் இல்லை. இதனால் அதிமுக அரசு போகட்டும் என்கிற முடிவுக்கு டெல்லி வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

சவக்குழியா திமுகவுக்கு?
இதனால்தான் தமிழக அரசை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக திமுக தலைமையின் தலைக்கு மேலே தொங்கும் கத்திகளைக் காட்டி அக்கட்சி மீது சவாரி செய்து பார்க்கவே பாஜக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதைத்தான் பிரதமர் மோடியின் கருணாநிதியுடனான சந்திப்பு, தமிழிசையின் பேட்டிகள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அப்படி பாஜக பக்கம் சாய்ந்தால், அது தனக்கு தானே திமுக தோண்டிக் கொள்ளும் சவக்குழியாகவே இருக்கும். நிச்சயம் தமிழக மக்கள் பாஜக- திமுக அணியை ஏற்கவேமாட்டார்கள் என்கின்றனர் திமுகவில் இன்னமும் கொள்கைப் பிடிப்புள்ள மூத்த நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications