For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக வித்தைகளால் சிதைந்து, சின்னா பின்னமாகும் அதிமுகவும், தமிழக அரசும்!

By Shankar
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

முதல்வர் ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. எம்ஜிஆர் 1987 ல் மறைந்த போது அடுத்த நிமிடமே அஇஅதிமுக இரண்டாக உடைந்து ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிளந்தது. 1988 ல் ஜானகி முதல்வராக இருந்த தமிழக அரசு அன்றைய மத்திய அரசை ஆண்டு கொண்டிருந் ராஜீவ் காந்தி அரசால் கலைக்கப் பட்டது. 1988 முழுவதும் தமிழகம் குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. 1989 ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 1991 ஜனவரி 30 திமுக அரசை சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு கலைத்தது. அடுத்து வந்த மே 21 ம் தேதியில் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த அனுதாக அலையில் காங்கிரஸ் - அஇஅதிமுக அணி வெற்றி பெற்றது. ஜெயலலிதா தன்னுடைய 42 வது வயதில் முதலமைச்சர் ஆனார். ஆனால் 1991 - 1996 ல் அஇஅதிமுக தமிழகத்தை சூறையாடியதற்கு பரிசாக 1996 தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியை இழந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவே தோற்றுப் போனார். 1996 ல் திமுக திரும்பவும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது.

இதெல்லாம் பழைய கதைதான். ஆனால் இனிமேல் எழுதப்படவிருக்கும் செய்திகளுக்கும் நாம் மேலே குறிப்பிட்ட விஷயங்களுக்கும் இருக்கும் சம்மந்தமும், வேறபாடுகளும், ஒற்றுமையும் முக்கியமானது. அதனால்தான் இந்தக் கட்டுரையின் முதற் பத்தி வரலாற்றை விவரிக்கிறது.

BJP's role in ADMK's fall and TN govt inactive

ஜெயலலிதா டிசம்பர் 5 ல் மறைந்தவுடனேயே ஓபிஎஸ் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. அதுவும் முழு அளவிலான அரசு. அண்ணா, எம்ஜிஆர் இறந்த போதெல்லாம் இடைக்கால அரசுகள்தான் உடனடியாக பதவியேற்றன. ஆனால் ஜெ இறந்து அந்த நள்ளிரவிலேயே ஓபிஎஸ் தலைமையில் ஒரு முழுமையான புதிய அரசு பதவியேற்றது. ஜெ அமைச்சரவையில் இருந்தவர்கள் அனைவரும் இதில் அமைச்சர்களாக இருந்தனர்.

"ஆஹா, எவ்வளவு நல்ல விஷயம் பாருங்கள். ஜெ இறந்தவுடன் அஇஅதிமுக வில் பதவிச் சண்டை மூளும். அந்த களேபரத்தில் ஆட்சி கூடக் கலைக்கப் படலாம். ஆனால் தற்போதய அஇஅதிதமுக வினர் பக்குவமானவர்கள், அவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆட்சியின் எஞ்சிய நான்கரை ஆண்டுகள் ஓபிஎஸ் தலைமையிலான அஇஅதிமுக அரசு நன்றாக ஆளும்,'' என்று கதை அளந்தவர்கள் தற்போது களை இழந்து சோகமாக இருக்கிறார்கள். ஓபிஎஸ் தன்னுடைய ராஜினாமா நிர்ப்பந்தத்தால் வாங்கப்பட்டது என்று ஜெ சமாதியில் இரவு 9 மணிக்கு சுமார் 40 நிமிட தியானத்திற்கு பின்னர் சொன்ன பின்னர்தான் நிலைமை பற்றி எறிய ஆரம்பித்தது.

2016 டிசம்பர் 30 அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக ச சிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். பிப்ரவரி 14 ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறைக்குப் போவதற்கு முன்பு தன்னுடைய அக்காள் மகனும், ஜெ வால் அஇஅதிமுக விலிருந்து நீக்கப்பட்டவருமான டிடிவி தினகரனை அஇஅதிமுக வின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார்.

சசிகலா சிறைக்குப் போன பின்னரே அஇஅதிமுகவில் கோஷ்டி பூசல் களை கட்டத் துவங்கியது. 1988 ல் ஜானகி அணி, ஜெ அணி காலத்தில் நடந்தது போன்ற தெருச் சண்டைகள் இப்போது நடக்கவில்லை. ஆனால் அதனை விட மோசமான நிகழ்வுகள் அஇஅதிமுக வை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒரே அடியாக அழிக்கக் கூடிய காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. வெளிப் பார்வைக்கு இந்த சண்டை எல்லாம் ஏதோ இயற்கையாக நடப்பது போன்று இருக்கின்றன.

ஓபிஎஸ் தன்னுடைய முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக ஆடிய, ஆட்டங்களும், திடீரென்று சசிகலா வுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியதும், தற்செயலாக நிகழ்ந்தவை இல்லை. இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த ஒருவர் ஓபிஎஸ் பின்னால் உறுதியாக இருப்பதால்தான் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் சுயசார்பு மற்றும் சுயமரியாதை கொண்ட தலைவர் தானென்று நிறுவ மேற் கொண்டிருக்கும் முயற்சிகள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானவுடன் ஓபிஎஸ்ஸூக்கு, மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்திருக்கிறது. அதாவது மத்திய ரிசர்வ் போலீசார் 24 மணி நேரமும் ஓபிஎஸ் ஸுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.

இதனிடையே ஜெ மறைந்தவுடனேயே இதுவரையில் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் நிகழாத சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன. தலைமை செயலாளர் ராம் மோஹன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனைகள். தலைமை செயலாளர் நியமனத்தில் மாநில அரசின் ஆட்சேபனையையும் மீறி கிரிஜா வைத்தியநாதன் நியமனம். எடப்பாடியை ஆதரிப்பவர்கள் மீது மட்டும் வருமான வரித் துறை பாயும். உதாரணம் நடிகரும், ஒரு கட்சியின் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா வுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்த அடுத்த நாள் சரத்குமார் வீட்டில் ரெய்டுகள் என்பது வழக்கமாக இந்தியாவில் அவ்வளவு சீக்கிரத்தில் நிகழ்க் கூடிய சம்பவங்கள் கிடையாது. வழக்கமாக எந்த வழக்காக இருந்தாலும் ஆமை வேகத்தில் செயலாற்றும் மத்திய அரசு மேலே குறிப்பிட்ட விஷயங்களில் எல்லாம் முயல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.

இதில் லேட்டஸ்ட் அடிஷன் டிடிவி தினகரன் மீதான வழக்கு.. தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்று டெல்லி போலீஸ் சொல்கிறது. காரணம் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான். டெல்லியில் கைதான தினகரன், சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்படுகிறார். வழக்கை விசாரிக்கும் டெல்லி போலீஸ் தினகரனின் மனைவியிமும் பல மணி நேரம் விசாரணை நடத்துக்கிறது.

இதனையெல்லாம் சொல்லுவதற்கு காரணம் ஓபிஎஸ் ஸும் மற்றும் அவரை ஆதரிப்பவர்களும் ஏதோ ஊழல் அண்டாத உத்தம புத்திரர்கள் என்பதல்ல. எடப்பாடியின் ஆதரவாளர்கள் எந்தளவுக்கு ஊழலில் மூழ்கி முத்தெடுத்தவர்களோ அதே அளவுக்கு ஊழல் புரிந்தவர்கள்தான் ஓபிஎஸ் ஆதரவாளர்களும். ஆனால் ஒரு தரப்பு மீது மட்டும் நடவடிக்கை என்பது மோடியின் செயல் திட்டத்தை நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியின் இயல்பு அறிந்துவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமான நிகழ்வாகவே தெரிகிறது.

"குஜராத்தில் 14 ஆண்டுகள் மோடி செய்த ஆட்சியை பார்த்தவர்களுக்கு தற்போது தமிழகத்தில் நடக்கும் காரியங்கள் ஆச்சரியத்தை கொடுக்காது. மோடியின் சாய்ஸ் ஓபிஎஸ்தான். ஓபிஎஸ் எப்படியாவது தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்பியிருந்த மோடிக்கு எடப்பாடி முதல்வரானது எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயமாகும்.. தன்னுடைய அரசியல் எதிரிகளை பிரதமராவதற்கு முன்பும், பின்பும் மோடி நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் விதத்தை பார்த்தால் தான் நமக்கு தமிழகத்தில் நடக்கும் காரியங்கள் ஆச்சரியம் அளிக்காது. ஆனால் சாதாரண பார்வையில் பார்ப்பவர்களுக்கு இவை எல்லாம் ஏதோ சட்டப் படி நடக்கின்றன என்றுதான் தெரியும்,'' என்கிறார் குஜராத்தில் மோடி ஆட்சியின் போது நான்காண்டுகள் ஒரு தேசிய ஆங்கில நாளிதழின் ஆசிரியராக இருந்த மூத்த பத்திரிகையளர் ஒருவர்.

140 ஆண்டுகள் காணாத வறட்சியை இன்று தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வறட்சியால் பாதிக்கப் பட்ட கர்நாடக மாநிலத்துக்கு கொடுக்கும் நிவாரண தொகைக்கு இணையான தொகையை மோடி அரசு தமிழகத்துக்கு கொடுக்கவில்லை.

"இன்று ஒவ்வொரு அமைச்சரும் எப்போது தங்கள் வீடுகளுக்கு வருமான வரித் துறை வரும் என்ற அச்சத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். 2011 லிருந்து இன்று வரையில் அஇஅதிமுக வின் அமைச்சர்கள் செய்த காரியங்களுக்கான 90 சதவீத சாட்சியங்கள், முழுமையான விவரங்கள் இன்று மத்திய அரசிடம் இருக்கின்றன. மேற்கு வங்கத்தை ஆளும் மமதா கட்சியின் எம் பி ஒருவர் கைதான போது மேற்கு வங்கம் முழுவதும் மமதா கட்சியினர் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். பந்த் நடத்தினார்கள். இன்று எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பாஜக பரிவாரங்கள் தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக வை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ஒன்றும் தெரியாதவர் போல அமைதி காக்கிறார். ஆனால் ஒரு வார்த்தைக் கூட அஇஅதிமுகவின் ஒரு தலைவரிடம் இருந்து கூட வரவில்லை என்பதுதான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். அந்தளவுக்கு இன்று தமிழக அமைச்சர்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்," என்கிறார் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர்.

ஜெ இறந்த இந்த ஐந்து மாதங்களில் ஒரு விஷயத்தில் கூட அரசியல் ரீதியில் அஇஅதிமுக பாஜக வுக்கு எதிராக எந்த கருத்தையும் சொல்லவே இல்லை. இந்தியாவை ஆளும் எந்த பிராந்திய கட்சியும் இந்தளவுக்கு மத்திய அரசிடம் அடிமையாக பம்மிக் கொண்டு இருந்ததில்லை.

மற்றோர் ஆச்சரியமான விஷயம் அஇஅதிமுக வின் இரண்டு கோஷ்டிகளும் மீண்டும் ஒன்று சேர எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள். இதில் எடப்பாடி அணிதான் ஆர்வம் காட்டுகிறது. ஓபிஎஸ் அணி ஒவ்வோர் நாளும் புதிது புதிதாக நிபந்தனைகளை விதித்துக் கொண்டே போகிறது.

"மத்திய ஆட்சியின் மேலிடத்து ஆசிர்வாதம் இல்லாமல் அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர முடியாது. தற்போதைக்கு அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்வது என்பது மோடியைப் பொறுத்த வரையில் சகித்துக் கொள்ள முடியாத விஷயம். மற்றுமோர் முக்கியமான விஷயம் 2019 ல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது எந்த மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருக்கக் கூடாது என்பது பாஜக மற்றும் மோடியின் விருப்பமாகும். அஇஅதிமுக ஒரு வேளை ஒன்று சேர்ந்து அதில் எவராவது ஒருவர் மாநில அரசியலில் செல்வாக்கு பெறுவதை மோடி ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இது புரிந்தால் ஓபிஎஸ் தரப்பு கட்சியின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்வதற்கு எதிராக எடுக்கும் தொடர்ச்சியான நிலைப்பாடுகள் நன்கு புரியும்,'' என்கிறார் வாஜ்பாய் காலத்தில் செல்வாக்குடன் இருந்து பாஜக மூத்த தலைவர் ஒருவர்.

வெளிப்படையாகச் சொன்னால் மோடிக்கும், சசிகலா சிறையிலிருந்து கொண்டே இயக்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இடையிலான அரசியல் போரில் தமிழக அரசின் நிர்வாகம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இதன் பாதிப்பு வரும் மாதங்களில் தான் ஒட்டுமொத்த தமிழ் நாட்டுக்கும் தெரிய வரும்.

ஜெ இறந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் சசிகலா தலையில் மோடி தன் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். அதனை பார்த்த பெரும்பாலானோர் மோடி சசிகலா வை அங்கீகரித்து விடுவார் என்றே நினைத்தனர். மோடி வந்து சென்ற அடுத்த நாள் இதுபற்றி சில குறிப்பிட்ட மூத்த செய்தியாளர்களிடம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த முன்னாள் மத்திய அமைச்சர் சொன்ன கருத்து இதுதான்:
"மோடி சசிகலா தலையில் தன்னுடைய கையை வைத்து ஆசிர்வாதம் செய்து விட்டார் என்றே நீங்கள் எல்லாம் நினைக்கிறீர்கள். இல்லை... இல்லவே இல்லை .... இனிமேல் சசிகலா வின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது என்பதற்கான சமிக்ஞைதான் அந்த ஆசிர்வாதம். மஹாபாரதத்தில் வரும் திருதிராஷ்டிர ஆலிங்கணம் என்று தான் மோடியின் நடவடிக்கையை நான் பார்க்கிறேன்,'' என்று கூறியிருக்கிறார்.

அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திருதிராஷ்டிர ஆலிங்கணத்தால் பாதிக்கப்படுவது வெறும் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மட்டும்தான் என்றால் நாம் கவலைப்படத் தேவையில்லை. இதில் பாதிக்கப்படுவது அஇஅதிமுக வும் அதை விட முக்கியமாக தமிழக அரசும், மக்களும்தான் எனும் போதுதான் விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய தமிழக அரசு என்பது ஒரு 'நொண்டி வாத்து'தான். அதாவது a lame duck government. இந்த நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கும் காரியத்தை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. முற்றிலும் தமிழக அரசு நிர்வாகம் செயலற்று, கிட்டத்தட்ட செத்துப் போன நிலைமைக்கு இன்று சென்று கொண்டிருக்கிறது.

நடக்கின்ற காரியங்களை விருப்பு, வெறுப்பு இல்லாமல் அரசியல் அறிவுடன் பார்த்தால் ஒன்று தெளிவாகிறது... அது, "ஜூலையில் குடியரசு தலைவர் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கு பிறகு தமிழக அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப் படலாம். தற்போதய நிச்சயமற்ற அரசியல் சூழல் தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாக போகலாம்.

அது 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக வுக்கு அமோக வாக்களித்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு அஇஅதிமுக வும், மோடியும் கொடுக்கும் அற்புத பரிசாக இருக்கும்.

English summary
Mani's analysis on 'Modi's divide and rule' policy in Tamil Nadu politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X