For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை தூத்துக்குடி மேயர் தேர்தல் திடீர் நிறுத்தம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று நள்ளிரவு திடீரென அறிவித்தது. தேர்தல் நடைபெறும் தேதி ஓரிரு நாளில் அரசு சார்பில் முறையாக அறிவிக்கப்படும் எனவும், அதுவரை வேட்புமனுக்கள் ஏதும் பெற வேண்டாம் எனவும் தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர் அண்மையில் ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.இதனால் ஏற்பட்ட காலியிடங்களில், தற்போது அடுத்த நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பவர்களிடம் பொறுப்பு வழங்கப்பட்டு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக அதிமுக சார்பில், ஊராட்சி தலைவர்களாக இருந்தவர்கள் முதல் மாநகராட்சி மேயர்களாக இருந்தவர்கள் வரையில் வேட்பாளர்களாக அறிவிக்கபட்டனர். அவர்களில் பலர் வெற்றியும் பெற்று எம்.பி.,யும் ஆகி உள்ளனர்.

இடைத்தேர்தல் அறிவிப்பு

இவ்வாறு காலியாக உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர்கள், சங்கரன்கோவில், ராமநாதபுரம் நகராட்சி தலைவர்கள் பதவிகள் உட்பட, பல்வேறு உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 18ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பை, மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, நடத்தை விதிகள் மட்டுமின்றி, வேட்புமனு தாக்கலும் அமலுக்கு வந்தது.

வேட்புமனு தாக்கல்

தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக நேற்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் லட்சுமி கூறுகையில், நெல்லை மாநகராட்சியில் மேயர் தேர்தலுக்கு நேற்று 6ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யலாம். வரும் 14ம் தேதி வேட்புமனுதாக்கல் பரீசிலனை நடக்கிறது. 16ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தினமாகும். ஒரு மாத பிரசார காலத்திற்கு பிறகு செப்டம்பர் 18ல் தேர்தல் நடக்கிறது. 20ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது என்றார்.

திடீர் அறிவிப்பு

தேர்தல் பணிகள் தீவிரமாக துவங்கப்பட்ட நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று நள்ளிரவு அறிவித்தது. திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம் ஏதும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

மேயர் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி முறைப்படி அரசு சார்பில் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என நெல்லை மாநகராட்சி மேயர்(பொறுப்பு) லட்சுமி கூறியுள்ளார். இருப்பினும், தேர்தல் கமிஷனிடம் வாக்காளர் பட்டியல் முறையாக அளிக்கப்படாததும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றிருப்பதுமே தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Tamil Nadu Government's announcement of the sudden halt in Tuticorin, Tirunelveli Mayor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X