For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் உலக தமிழ் இணைய மாநாடு! ஆர்வம் உள்ளோர் ஆய்வு கட்டுரை அனுப்பலாம்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ள நிலையில், அதில் சமர்ப்பிக்க தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ் இணையம் 2015, மாநாட்டு ஆய்வரங்கக் குழு தலைவர் முனைவர் இர. ஸ்ரீராம் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 மற்றும் ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ல் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் "கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்" ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Call for papers for presentation at the forthcoming 14th International Conference on Tamil Computing and Tamil Internet

இயல்மொழிப் பகுப்பாய்வு - தமிழ்ச்சொல்லாளர்(சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி...) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்...

ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி. கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்) திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம். கணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்.

தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்... தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்...தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் 25.12.2014 தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்னர் 1.02.2015ம் தேதிக்குள் முழுக் கட்டுரையையும் அனுப்பிவைக்க வேண்டும்.

கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு(டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கத்தினை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு 1.03.2015 ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும். முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்கவேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும் உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.

கட்டுரைச் சுருக்கம் அனுப்ப இறுதி நாள் 25.12.2014, முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள், 01.02.2015, தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள் 01.03.2015. மாநாடு நடைபெறும் நாட்கள் 30.05.2015 முதல் 01.06.2015 வரை. தமிழ் இணைய மாநாடு 2015இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
INFITT is pleased to inform that arrangements are currently underway to hold the next Tamil Internet Conference 2015 at Singapore(National University of Singapore campus) during 30 May - 1st June 2015. The conference marks the fifteenth year of operation of INFITT in the country where INFITT was formed. Hence all the Tamil Computing enthusiasts are requested to cooperate and make the event a grand success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X