For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வோருக்கு ஆண்மை நீக்கம்: சென்னை ஹைகோர்ட் பரிந்துரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்றும் சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்களுக்கு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திட்டங்கள்தான் தேவை. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ் என்பவர் வந்தார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார்.

பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டெல்லிக்கு அழைத்து சென்றார். டெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் ஜான்சன் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.

பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார்.பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, போலீசில் புகார் செய்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். வில்லியம்ஸ் மீது, நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது . இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது.

வில்லியம்ஸ் மனு

வில்லியம்ஸ் மனு

இதனிடையே தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார். அவர் தனது, மனுவில், 'டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக நீதிமன்றத்திற்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை. மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது என கூறியிருந்தார்.

நீதிபதி வேதனை

நீதிபதி வேதனை

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9ம் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்' தண்டனையையும் வழங்கவேண்டும்.

கண்டனம் வர வாய்ப்பு

கண்டனம் வர வாய்ப்பு

இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும்.

பாலியல் தொந்தரவுகள்

பாலியல் தொந்தரவுகள்

நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகிறது, 2012ல், 38 ஆயிரத்து 172 வழக்குகளும், 2014ல், 89 ஆயிரத்து 423 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுமிராண்டிகளுக்கு தண்டனை

காட்டுமிராண்டிகளுக்கு தண்டனை

குழந்தைகளிடமும் சிறார்களிடமும் பாலியல் உறவு கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. கற்கால மனிதர்கள் போல நடத்தைக் கொண்டது. ஆனால் தற்போதுள்ள சட்டத்திட்டங்களால் இது போன்ற குற்றங்களை குறைத்து விட முடியாது. காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்களுக்கு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திட்டங்கள்தான் தேவை. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

ஆண்மையை அகற்றும் சட்டம்

ஆண்மையை அகற்றும் சட்டம்

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், ஆண்மை அகற்றும், தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனம் குறைய வாய்ப்புண்டு என்றார் நீதிபதி கிருபாகரன்.

மனு தள்ளுபடி

மனு தள்ளுபடி

மாஜிஸ்திரேட் முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை வில்லியம்ஸ், பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, வில்லியம்ஸ் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, வில்லியம்ஸ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கிருபாகரன் உத்தரவிட்டார்.

English summary
Castration. This is Madras high court's one-word solution for curbing spiralling sex offences against children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X