For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: தமிழக அரசு அறிக்கை விட்டதோடு சரி, எதுவும் செய்யவில்லை- ராமதாஸ் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மேகதாது சிக்கல் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியதையும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்ததையும் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 2 புதிய அணைகளைக் கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவரும், மத்திய அமைச்சருமான ஆனந்தகுமார் கூறியுள்ளார். மேகதாது பகுதியில் அணைகளை கட்டி மின்திட்டத்தையும், குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்த கர்நாடகத்துக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

Cauvery issue: Ramadoss slams TN government

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருக்கும் 2 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 48 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும். ஏற்கனவே மழைக்காலங்களில் மட்டும் தான் அணைகளில் நிரம்பி வழியும் உபரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கி வருகிறது. இப்போது புதிய அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குதிரைக் கொம்பாகிவிடும். ஏற்கனவே கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் இருந்தன. அதன்பின் 1970 ஆம் ஆண்டுகளில் ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகள் கட்டப்பட்டன. அவற்றை அப்போதிருந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தடுக்கத்தவறியதால் தமிழகத்திற்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மேகதாது அணைகள் திட்டமும் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தான் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டமும், சாலை மற்றும் தொடர்வண்டிப் போராட்டங்களும் முழு வெற்றி பெற்றிருப்பதிலிருந்தே தமிழக விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் கர்நாடகத்தில் புதிய அணைகளை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்றும், இதற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அடுத்த ஓரிரு நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி, நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோரை சந்தித்து பேசவிருப்பதாகவும் அமைச்சர் ஆனந்தகுமார் கூறுவது கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொதுவானவர்களாக செயல்பட வேண்டும்; இனம், மொழி, பிராந்திய உணர்வுகளுடன் பாரபட்சமாக செயல்படக் கூடாது. ஆனால், ஆனந்தகுமார் தாம் மத்திய அமைச்சர் என்பதை மறந்துவிட்டு, கர்நாடகத்துக்கான அமைச்சரைப் போல செயல்படுவது முறையானதல்ல.

இதற்கு முன் கடந்த ஜூன் மாதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அறிவித்திருந்த நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆனந்தகுமாரும், சதானந்த கவுடாவும் தான் தங்கள் மாநிலத்திற்கு ஆதரவாக இப்பிரச்சினையில் குறுக்கிட்டு மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போட்டனர்.

இப்போதும், அதேபோன்ற அணுகுமுறையை கடைபிடித்து, தமிழகத்தின் வளமான மாவட்டங்களை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் காவிரியின் குறுக்கே 2 புதிய அணைகளை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி பெற்றுத்தர மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் துடிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

மேகதாது பகுதியில் புதிய அணைகளை கட்டுவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்னும் நிலையில், இதுதொடர்பான கர்நாடக அரசின் முயற்சிகளைக் கண்டித்து, தடுத்து நிறுத்துவது தான் ஆனந்த்குமார் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கு அழகாகும். அதைவிடுத்து தனது மாநிலமும், தனது மக்களும் நலமாக இருந்தால் போதும் என்ற அணுகுமுறையை அமைச்சர் கடைபிடிப்பது 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தத்துவத்தை அடியோடு சிதைத்துவிடும்.

இன்னொருபுறம் அனைத்துக்கட்சிக் குழுவினருடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இப்பிரச்சினை குறித்து வலியுறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமய்யா திட்டமிட்டு இருக்கிறார். இப்பிரச்சினையில் பலனை அனுபவிக்கப்போகும் கர்நாடக அரசு இவ்வளவு விரைவாக செயல்பட்டு வரும் நிலையில், பாதிப்பை எதிர்கொள்ளப் போகும் தமிழக அரசு அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது.

மேகதாது சிக்கல் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியதையும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்ததையும் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறையின்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.

மேகதாது பகுதியில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது ஒருபுறமிருக்க இப்பிரச்சினையில் அரசியல் ரீதியிலான அழுத்தங்களைத் தர வேண்டியதும் அவசியமாகும்.

எனவே, இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டப்பேரவையையும் தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இரு அமர்வுகளிலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, அனைத்துக்கட்சிக் குழுவினருடன் டெல்லி சென்று பிரதமரிடம் ஒப்படைத்து, மேகதாது அணைத் திட்டதிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss slammed ADMK government for being lethargic over Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X