ராமஜெயம் கொலை வழக்கு எப்போது முடிவுக்கு வரும்?- சிபிசிஐடி சொல்வதை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு பற்றி பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் வரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே வழக்கு முடிவுக்கு வரும் என்று சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக திருச்சி சிறையில் சிபிசிஐடியை சேர்ந்த 8 தனிப்படை போலீசார் சில கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன், பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் வந்தால் வழக்கு முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கை தமிழக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணை செய்துவருகிறது.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை. ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இதுவரை ரகசிய அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

முதல்வர் விளக்கம்

முதல்வர் விளக்கம்

இந்த வழக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், இந்த வழக்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை 12 தனிப்படைகளை அமைத்து விசாரித்துவருவதாகக் கூறிய அவர், தொழில்போட்டி, அரசியல் விரோதம், குடும்பப் பிரச்சனை ஆகியவற்றால் இந்தக் கொலை நடந்திருக்கலாமோ என விசாரித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

1100 பேரிடம் விசாரணை

1100 பேரிடம் விசாரணை

இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

உண்மை கண்டறியும் சோதனை

உண்மை கண்டறியும் சோதனை

மேலும், ராமஜெயத்துடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகவும் அவர்களில் இருவர் உண்மையறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒருவர் ஒப்புக்கொள்ளவில்லையென்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

நெருக்கமானவர்கள் மவுனம்

நெருக்கமானவர்கள் மவுனம்

ராமஜெயத்திற்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

திருச்சி சிறையில் விசாரணை

திருச்சி சிறையில் விசாரணை

இந்த கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சி சிறையில் சிபிசிஐடியை சேர்ந்த 8 தனிப்படை போலீசார் சில கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கு முடிவுக்கு வரும்

வழக்கு முடிவுக்கு வரும்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன், பொதுமக்களிடம் இருந்து தகவல்கள் வந்தால் வழக்கு முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார். நல்ல வேலை அந்த ஸ்ரீரங்கநாதர் வந்து சொன்னால் முடிவுக்கு வரும் என்று சொல்லாமல் விட்டாரே என்று பேசிக்கொள்கின்றனர் திருச்சிவாசிகள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CBCID Police team has pacified its probe in Ramajayam murder case after a long break
Please Wait while comments are loading...