சென்னை கட்டட விபத்து– அடுத்தடுத்து மீட்கப்படும் உடல்கள் - பலி 47 ஆக உயர்வு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து உடல்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தொடர்ந்து 5வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. துணை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கமாண்டோ படை வீரர்கள், சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு படையினர், மெட்ரோ ரயில் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2200 பேர் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கான்கிரீட் தளங்களை துளையிட்டு உடைத்து அகற்றி உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல் நிலவரப்படி 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணியில், இதுவரை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 11 பேரும், தமிழகத்தை சேர்ந்த 5 பேரும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 21 சடலங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு அடையாளம் தெரியாமல் உள்ளன.
மீட்பு பணியின்போது நேற்று மதியம் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்து உயிருக்கு போராடிய நிலையில் வாலிபர் ஒருவர் மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக மீட்பு குழுவினர் அவருக்கு திரவ வடிவிலான குளுக்கோஸ் கொடுத்தனர்.
எனினும் மீட்பு குழுவினரால் அவரை உனடியாக மீட்க முடியவில்லை. அவரை உயிருடன் மீட்பதற்காக மீட்பு குழுவினர் மிகுந்த கவனத்துடனும், பொறுமையாகவும் இடிபாடுகளை அகற்றினர்.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மாலை 5 மணி அளவில் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த விகாஷ் (23) என்பது தெரியவந்தது.
கட்டடம் இடிந்து விழுந்து 72 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பின் மீட்டெடுக்கப்பட்ட விகாஷ் இடிபாடுகளிலிருந்து வெளியே வந்த உடன் தண்ணீர் அருந்தினார்.
இது மீட்பு குழுவினருக்கும், சுற்றி பார்வையிட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வியப்புடன் கூடிய மகிழ்ச்சியை அளித்தது. உடனடியாக மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து உடல்நிலையை தேற்றினர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.