அதிமுக அரசுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு கண்டு கருணாநிதிக்கு பொறாமை: ஜெயலலிதா
சென்னை: நதிநீர்ப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து "நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்" என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, "அரைவேக்காடு யார்?" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

"வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது" என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்த இலக்கணத்திற்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி.
கேரள மாநிலத்தின் கீழ் வரும் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகளின் பெயருக்கு அருகிலேயே, இந்த அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்ற வாசகமும்; தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலின் பின் குறிப்பில், கேரளாவில் உள்ள மேற்படி அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்ற வாசகமும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இது மட்டுமல்லாமல், மேற்படி அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மூலம், தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்னால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி துரோகம்
கருணாநிதி தன்னுடைய அறிக்கையின் மூலம், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை தான் தட்டிக் கேட்காததை ஒப்புக் கொண்டிருக்கிறார். துரோகத்தை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. எனவே, கருணாநிதியின் இந்த அறிக்கை யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் அமைந்துள்ளது.
சிறுபிள்ளைத்தனமானது
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்த கே.எஸ். இராதாகிருஷ்ணன், பல்வேறு காலங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்தவர். மூன்றாவது முறையாக தி.மு.க.வில் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்த வழக்கு, தி.மு.க.வினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இதை வைத்து நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க. போராடியதாக உரிமை கொண்டாட கருணாநிதி முயல்வது சிறுபிள்ளைத்தனமானது.
ஏமாற்றிய கருணாநிதி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றினார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நதிநீர்ப் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சனைகளிலும் மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வேலை.
எம்.ஜி.ஆர் கடிதம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, "மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் உட்பட அனைத்து நதிகளும் தேசிய நதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நதி நீரை முறையாக பயன்படுத்தும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்து 26.4.1982 அன்றே அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
துரும்பைக் கிள்ளி போடவில்லை
2004 முதல் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தில் 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. இப்படி இருக்கும் போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்தார் கருணாநிதி? ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை கருணாநிதி. நதிநீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் இதையெல்லாம் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கருணாநிதிக்கு பொறாமை
எனது தலைமையிலான அதிமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமையின் வெளிப்பாடாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தவறான அறிக்கைகளை கருணாநிதி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.
வெற்றிலைப் பாக்குக் கடை
1.7.2014 அன்று "கேள்வியும் நானே - பதிலும் நானே" என்ற பாணியில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், "அ.தி.மு.க. அரசு சார்பில் பத்து இடங்களில் ‘அம்மா' மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே" என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, "அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் "அம்மா வெற்றிலை-பாக்கு கடை" களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்" என்று வயிற்றெரிச்சலுடன் தனக்குத் தானே பதில் அளித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
அரசியல் ஆதாயம்
அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. இதிலிருந்து "அரசியல் அரைவேக்காடு யார்?" என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.