வெள்ள சேத நிவாரணத் தொகையை மக்களின் வங்கிக் கணக்கில் போட சிபிஎம் கோரிக்கை
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களது வீடுகளை கணக்கெடுப்பு நடத்துவதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஏழை மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய முறைகேடுகள் உடனடியாக தடுக்க வங்கிக்கணக்கில் நிவாரணத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டசபை தொகுதி எம்.எல்.எவுமான கே. பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சமீபத்தில் வெள்ளத்தால் கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள சிதம்பரம் பகுதியில் நிவாரணம் வழங்குவதில் பெரும் குறைபாடு ஏறபட்டு மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், தொகுப்பு வீடுகள், அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள், ஒட்டு மற்றும் ஓட்டு வீடுகள் அனைத்துக்கும் நிவாரணம் மறுக்கப்பட்டு மிக குறைந்த அளவு எண்ணிக்கை வீடுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளார்கள்.
- இந்த அரசாணைப்படி நீர் சூழ்ந்த வீடுகளுக்கும், துணிமணிகளை இழந்த குடும்பத்தினருக்கும் தலா ரூ.1800/-ம், வீட்டு சாமான்கள் இழந்தவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2000/-ம் மொத்தம் ரூ.3,800/- வழங்கிட வேண்டும். இந்த வகையில் பெரும் பகுதியானவர்கள் நிவாரணம் பெற தகுதி படைத்தவர்கள். இந்த வகையில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் யாருக்கும் வழங்கவில்லை.
- வேலை மற்றும் வாழ்வாதாரம் இழந்த ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.60/-ம், ஒரு குழந்தைக்கு ரூ.45/-ம் வழங்கிட வேண்டும். இந்த உதவி 60 நாள் முதல் 90 நாட்கள் வரை வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி உழைப்பாளிகள் இன்றுவரை வேலைக்கு செல்லவில்லை.
- வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளிகளுக்கு குடும்பத்துக்கு தலா ரூ.5000/- இழப்பீடு அளிக்க வேண்டும். சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளை புதுப்பிக்கும் வகையில் நிவாரணம் வழங்கிட வேண்டும். ஆனால் மேற்கண்ட விதிப்படி நிவாரணம் வழங்கப்படவில்லை.
- அனைத்து குடிசைகள், தொகுப்பு வீடுகள், அரசுதிட்டங்களினால் கட்டிக் கொடுத்துள்ள வீடுகள், ஓட்டு வீடுகள், ஒட்டு வீடுகள் ஆகிய வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டு சாமான்கள் இழந்த அனைவருக்கும் தலா ரூ.5000 /- வழங்க வேண்டும்.
- முகாம்களில் தங்க வைக்கப்பட்டமக்களுக்கு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, புடவை, ஒரு லிட்டர் மண்ணெண்ணை, ரூ.1000/- நிவாரணம் வழங்கிட வேண்டும். இத்தகைய உதவிகளும் யாருக்கும் வழங்கப்படவில்லை.
- முழுதும் சேதமடைந்த வீடுகள் - ரூ.95,100/- வழங்கிட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கவில்ல
- பகுதி சேதமடைந்த - கல்வீடுகள்- ரூ.5,200/- வழங்கிட வேண்டும். ஒட்டுமொத்தத்தில் கல்வீடுகளுக்கு நிவாரணமே வழங்க முடியாது என அதிகாரிகள் பிடிவாதம் செய்கிறார்கள். மேற்கண்ட அரசாணையை யாரும் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதாக தெரிகிறது.
- முழு சேதமடைந்த குடிசைகளுக்கும் - பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கும் முறையே தலா ரூ.5000/- , ரூ.4100/-ம், 10 கிலோ அரிசியும் வழங்கிட வேண்டுமென அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கிய இடங்களில் 10 கிலோ அரிசி வழங்கப்படவில்லை. அதையும் வழங்கிட வேண்டும்.
- மேற்கண்ட தொகையினை கொண்டு குடிசையினை புனரமைக்க முடியாது. எனவே, இத்தொகையினை முறையே ரூ.25,000/- , ரூ.20,000 என உயர்த்தி வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
- இறந்தவர்களுக்கு இழப்பீடு : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் என்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எப்ஐஆர் இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்க முடியும் என வற்புறுத்தப்படுகிறது. மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடையாலும், தீபாவளி பண்டிகையாலும் சிலர் பிரேத பரிசோதனை செய்யாமல் உடல அடக்கம் செய்துள்ளார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளது. இதுவரைக்கும் நிவாரணம் வழங்காதது அவர்களது குடும்பத்தினருக்கு வேதனையாக உள்ளது.
- இத்தகைய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கோரி பல கட்ட போராட்டங்களில் அன்றாடம் ஈடுபட்டு வருகிறார்கள்.
- எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட உரிய அறிவுரைகளை மாவட்ட அதிகாரிகளுக்கு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களது வீடுகளை கணக்கெடுப்பு நடத்துவதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழும்பியுள்ளன. சில கிராமங்களில் மாடி வீடுகள் உள்ளிட்ட அதிகமான வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேசமயம் பல ஊராட்சிகளில் ஒற்றை இலக்க அளவில் மட்டுமே கணக்கெடுக்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு நிவாரணமும், அதேசமயம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய முறைகேடுகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
- இப்போது வழங்கப்படும் தொகையில் ஒரு பகுதி பிடித்துக் கொள்ளப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் எனவே, நிவாரண உதவிகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளது வங்கி கணக்கில் டெபாசிட் செய்திட வேண்டும். பணமாக நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வழங்கப்படும் தொகை முழுமையாக பயனாளிகளை சென்றடையும் என்று கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications