For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித் பூசாரி தற்கொலை வழக்கு: ஓ.பி.எஸ். சகோதரர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஹைகோர்ட் மறுப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பூசாரி தற்கொலை தொடர்பான வழக்கில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் ஓ.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப்பட்ட இளைஞர் நாகமுத்து. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடந்த 5.5.2012 இரவு, கோயில் நிர்வாகிகளான வெங்கிடசாமி, பழனிச்சாமி ஆகியோருக்கும் நாகமுத்துவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் தன்னை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி தாக்கியதாக புகார் கொடுத்திருக்கிறார் நாகமுத்து. மறுநாள், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும் பெரியகுளம் நகர்மன்ற தலைவருமான ஓ.ராஜா, புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

Dalit Priest Suicide: HC denies CBI Probe

தொடர் புகார்கள்

இதுகுறித்து பெரியகுளம் டி.எஸ்.பியிடம் கொடுத்த புகாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், டி.எஸ்.பி. உமாவும் எதிரிகளுக்கு ஆதரவாக பேசி தன்னை மிரட்டுவதாக 7-5-2012ல் தேனி எஸ்.பிக்கு புகார் அனுப்பியிருக்கிறார் நாகமுத்து. இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பி இருக்கிறார். தனது புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி ‘எவிடென்ஸ்' அமைப்பின் உதவியுடன் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடுத்தார்.

பூசாரி தற்கொலை

நீதிமன்ற உத்தரவுப்படி, பழனிச்சாமி, வெங்கிடசாமி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2-9-2012ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நாகமுத்து, 7-12-2012 அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓ.ராஜாதான் காரணம்

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘என் மரணத் துக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாதான் காரணம். என் மீது திருட்டுப் பழியையும் தீண்டத்தகாதவன் என்கிற பட்டத்தையும் சுமத்திவிட்டார். எனக்கும் என் குடும்பத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு தரவில்லை. அதனால், என் மரணத்தையே பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கின்றேன். காரணம் ஓ.ராஜா, மணிமாறன், வி.எம்.பாண்டி, சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன்' என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

2 பேர் கைது

நாகமுத்துவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் குறிப்பிட்டிருந்த 7 நபர்களில் மணிமாறனும் லோகுவும் கைது செய்யப்பட்டனர். ஓ.ராஜா உள்ளிட்ட மற்ற 5 பேர் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. விசாரணைக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சுப்புராஜ் வழக்குத் தொடர்ந்ததால் வழக்கை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது நீதிமன்றம்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இதனிடையே, நேற்று மாலை பெரியகுளம் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நாகமுத்து தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 61 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை அறிக்கையை பெரியகுளம் டி.எஸ்.பி. உமாமகேஸ்வரன், இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வழக்கு முடித்து வைப்பு

இதனிடையே பூசாரி தற்கொலை தொடர்பான வழக்கில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் ஓ.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Dalit priest, who allegedly committed suicide leaving a purported suicide note alleging that a brother of a Tamil Nadu Minister was responsible for his death, the Madras High Court bench Madurai, denied transfer of the case from police to CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X