
மாதவனின் தனிக்கட்சி அறிவிப்பு எதிரொலி.. தீபா பேரவை நாளை கூண்டோடு கலைப்பு?
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதால் மாநிலம் முழுவதும் தீபா பேரவை தொடங்கிய நிர்வாகிகள் அனைவரும் அதனை கலைத்து விட்டு ஓபிஎஸ் அணியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. அவரது தலைமையை ஏற்க விரும்பாத பல தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தேடி வந்தனர்.
தீபாவும் தொண்டர்களுக்கு பால்கனியில் நின்று தரிசனம் கொடுத்தார். பின்னர் மக்களுக்கு நல்ல செய்ய அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். ஏப்ரல் 17ஆம் தேதி தனது அரசியல் பயணம் தொடங்குவதாக கூறினார் தீபா.

தீபா பேரவை
மாநிலம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டது. பல ஊர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள், வேன்கள், பேருந்துகளில் வந்து தீபாவை பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு சென்றனர். தீபாவும் விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை
ஜெயலலிதா பிறந்தநாளான 24ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார். நிர்வாகிகளை நியமித்தார் தீபா, தன்னுடன் இருந்த கார் டிரைவர், தோழி ஆகியோருக்கு பேரவையில் முக்கிய பொறுப்பு அளித்தார். இதன் பின்னரே தீபாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்தது.

தனி ஆவர்த்தனம்
மாதவனும் தனியாக நிர்வாகிகளை அறிவிக்கவே பிரச்சினை பெரிதானது. எனினும் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக கூறினர். கருத்து வேறுபாடு என்றும் தெரிவித்தனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய தீபா, ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார். கூடவே மாதவனும் பங்கேற்றார்.

குடும்பத்துடன் தியானம்
ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தீபா அங்கு கணவர், தோழி, கார் டிரைவருடன் அமர்ந்து தியானம் செய்தார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் கூறினார். அதே பாணியில் நேற்று மாதவன் மெரீனா கடற்கரைக்கு சென்று தியானம் செய்தார். ஒரே வீட்டில் இருந்தாலும் தீபா பேரவை தொடங்கியிருக்கிறார். தான் தனிக்கட்சி தொடங்கியிருப்பதாகவும் அறிவித்தார்.

பேரவை நிர்வாகிகள் அதிருப்தி
மாதவனின் முடிவால் தீபா பேரவை தொடங்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர். தீபா பேரவை தொடங்க முதலில் காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜனும் முதன்மையானராக இருந்தார். தீபா பேரவையில் இருந்து செயல்பட்டு வந்த அவர் பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளாராம்.

ஆலேசனைக்கூட்டம்
தீபா பேரவையில் ஈடுபட்ட தோழர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தீபா பேரவை ஆலோசனைக்கூட்டம் திருவானைக்காவலில் நாளை நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் கலைப்பு
திருச்சியில் தீபா பேரவை கலைக்கப்படுவது போல தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தீபா பேரவை கலைக்கப்படும் என்றே தெரிகிறது.
இது தொடர்பாக தீபா பேரவையினர் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் அணியில் இணைய திட்டம்
ஓ.பி.எஸ். தனி அணியாக செயல்படத் தொடங்கிய போது தீபா அணியில் இருந்த பலரும் தங்களை ஓ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.
தற்போது தீபா பேரவையை கலைக்கும் நிர்வாகிகளும் ஓ.பி.எஸ். அணியில் இணைய திட்டமிட்டுள்ளனர். இது தீபாவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்ற தெரிகிறது.