For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபத்தக் களஞ்சியமான தேமுதிகவின் தேர்தல் அறிக்கை!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இது தேர்தல் காலம். வானத்தை வில்லாக வளைப்பதாகவும், நட்சத்திரங்களை கையில் பிடித்து வீட்டு வாசலில் கொண்டு வந்து கொட்டுவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி விடும் காலம்தான். சகட்டுமேனிக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடிய வாய்ப்புள்ளவையா, அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் எத்தகைய சதவிகிதம் என்பது பற்றியெல்லாம கிஞ்சித்தும் கவலைப் படாமல்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வீசி எறிவார்கள்.

DMDK's election manifesto a humpback

ஆனால் சராசரி அரசியல்வாதிகளின் அளவுகோல்களின் படி பார்த்தாலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகளை தற்போது தேமுதிக வழங்கியிருக்கிறது. தேமுதிக வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடியவையா, அதற்கான அரசியல் மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகள் எத்தனை சதவிகிதம் என்பது ஒரு முக்கியமான பிரச்சனை. ஆனால் அதனை விட முக்கியமானது எந்த தர்க்கவியல் அடிப்படையும் இல்லாமல் அள்ளி வீசப் பட்டிருக்கும் வாக்குறுதிகள் தான் இங்கு பிரச்சனேயே. ஆம். தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ எதைச் செய்தாலும், பேசினாலும் அதில் பொய்யும், புரட்டும் இருப்பது பிரச்சனையல்ல. அது காலங் காலமாய் இருந்து வருவது, எதிர்காலத்திலும் இருக்கப் போவது. மாறாக வாக்குறுதிகளில் தர்க்கவியல் அடிப்படையே (Logical basis) இல்லாமல் இருக்கிறது என்றால் அதுதான் அவலமானது. இப்போது கேப்டனின் தேர்தல் வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்க்கலாம்.

1. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 45 ஆகவும், டீசல் விலை ரூபாய் 35 ஆகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளப் படும்.

- எப்படிப் பார்த்துக் கொள்ளுவார்களாம் ...? மாநில அரசின் வரியைக் குறைப்பதால் மட்டுமே பெட்ரோலிய பொருட்களின் விலையை மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியும். அதுவும் ஓரளவுக்குத் தான். தற்போது மாநில அரசின் வரிகள் ஓரிரண்டு ரூபாய்க்கு வேண்டுமானால் குறைக்கப் படலாம். ஆனால் நிரந்தரமாக எவ்வாறு பெட்ரோலை 45 ரூபாய்க்கும், டீசலை 35 ரூபாய்க்கும் கொடுக்க முடியும்? அடிப்படையில் சர்வதேச சந்தை விலைகளின் படி மாறி, மாறி ஏறியும், இறங்கியும் நிலை கொள்ளும் ஒரு பொருளின் விலையை நிரந்தரமாக வைப்பேன் என்பது எதன் அடிப்படையில் சாத்தியம். அதுவும் பெட்ரோலிய பொருட்களின் விலையை தற்போது எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலை வந்த பின்னர் மாநில அரசால் இந்த விஷயத்தில் ஒரு துரும்பையும் கிள்ளப் போட முடியாது. அப்படி விலையை நிர்ணயித்தால், துண்டு விழும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்மந்தப் பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். மாநில அரசிடம் பணம் எங்கேயிருக்கிறது?

2. சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப் படும் கட்டணம் பாதியாக குறைக்கப் படும். இது சாத்தியப் படா விட்டால், சுங்க வரி வசூலிக்கும் கம்பெனிகள் நாட்டுடைமை ஆக்கப் படும்.

-என்னே ஒரு தெளிவு? சுங்க வரியை வசூலிக்கும் கம்பெனிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை என்கின்ற மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பெனிகள். ஒரு மத்திய அரசு நிறுவனம் செய்யும் வேலையில் தலையிட்டு, அந்த பணியையே நாங்கள் நாட்டுடமை ஆக்குவோம் என்று ஒரு மாநில அரசு எப்படி செயற்பட முடியும்?

3. அடுத்தது ஒரு அற்புதமான வாக்குறுதி ... தமிழகத்தில் 12,620 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒவ்வோர் குடும்பத்தினரின் மாத வருமானமும் 25,000 ரூபாயாக உயர்த்தப் படும். எப்படி உயர்த்துவாராம் கேப்டன்? மிகவும் சுலபமான வழியைச் சொல்லுகிறார் கேளுங்கள். 'தமிழகத்தில் 224 தாலுக்காக்கள் உள்ளன. ஒவ்வோர் தாலுக்காவிலும் ஒரு வணிக வளாகம் (commercial complex) கட்டப்படும். ஒவ்வோர் வணிக வளாகத்திலும் 200 முதல் 500 கடைகளும், 3 முதல் 5 தியேட்டர்களும் கட்டப் படும். இதன் மூலம் 1,120 தியேட்டர்களும், 1,12,000 கடைகளும் கட்டப்படும். வேலை வாய்ப்புகள் பெருகி, 12,620 குடும்பங்களுக்கும் வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.

-இவ்வளவு பெரிய கட்டுமானங்களுக்கான தொகை எவ்வளவு? அது எங்கிருந்து வரும்? இதற்குத் தேவையான மனித கரங்கள் எப்படி எங்கிருந்து தருவிக்கப் படும்? எந்த விவரமும், விளக்கமும் இல்லை.

4. வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் படும். இதற்காக எல் அண்ட் டி நிறுவனம் (நிறுவனத்தின் பெயர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஒரு சதுர அடி ரூபாய் 2,000 லிருந்து, ரூபாய் 5,000 வரையில் செலவிட்டு வீடுகள் கட்டப்படும். அடேங்கப்பா... கேப்டன் கட்டித் தரப் போவது வீடுகளா அல்லது ஐந்து நட்சத்திர விடுதிகளா ? தமிழக மக்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.

5. நல்லி மற்றும் போதீஸ் (பெயர்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன தேர்தல் அறிக்கையில்) போன்ற கடைகள் தமிழ் நாட்டிற்கு வெளியேயும், இந்தியாவுக்கு வெளியேயும் தங்களது கிளைகளை திறக்க அனுமதி வழங்கப் படும்.

-கேட்கும் போதே புல்லரிக்கவில்லையா? ஒரு ஜவுளிக் கடை தன்னுடைய மற்ற கிளைகளை மாநிலத்துக்கு வெளியேயோ அல்லது இந்தியாவுக்கோ வெளியேயோ திறப்பதற்கு மாநில அரசின் அனுமதியை எதற்கு பெற வேண்டும்? பகுத்தறிவுக்கு விடை கொடுத்து விட்டாரா விஜயகாந்த்?

6. ஆயிரம் பெண்கள் பள்ளிகள் மாலை நேர கல்லூரிகளாக மாற்றப் படும். இதன் மூலம் ஒவ்வோர் கல்லூரியிலும் 100 ஆசிரியர்கள் இருப்பார்கள். இந்த கல்லுரிகளில் இருந்து ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகள் வெளியில் வருவார்கள்.

-நம்முடைய கல்வியாளர்களும், கல்விக் கொள்கை வகுப்பாளர்களும் மயங்கி விழுந்து விடுவார்கள். இதற்கான நிதியாதாரங்கள் மற்றும் இன்ன பிற அடிப்படைக் கட்டுமான வசதிகள் பற்றி எந்தப் பேச்சும், அறிவிப்பும் இதில் கிடையாது.

7. மஹாத்மா காந்தியின் சுயசரிதை மாணவர்களுக்கு பாடமாக பள்ளிகளில் வைக்கப் படும்.

- சுதந்திரத்துக்குப் பின்பே பல ஆண்டுகளாக காந்திஜியின் சுயசரிதை மாணவர்களின் பாடத் திட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கேப்டன் மழைக்கும் பள்ளிக் கூடத்தின் கூரைகளின் நிழலைக் கூட அண்டியதில்லை போலும்.

இவையெல்லாம் வெறும் சாம்பிள்தான். இது தேமுதிக வின் தேர்தல் அறிக்கையின் முதல் பாகம். அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியிடப்படவிருக்கின்றன. அந்த பாகங்களில் மேலும் அதிகமாக வானவேடிக்கைகளை தமிழர்கள் கண்டுகளிக்கலாம்.

கடந்த பத்தாண்டுக்கும் மேலாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜயகாந்த் இது போன்ற அபத்தமான தேர்தல் வாக்குறுதிகளை ஏன் வழக்குகிறார். இது அவரது புரிதலில் உள்ள கோளாறா அல்லது தெரிந்தே தான் இதனை அவர் செய்கிறாரா?

‘இது ஒரு பொறுப்பற்ற அரசியல் ...இது போன்ற அரசியல் வாதிகளுக்கு அரசியல் சமூகம் (political society) என்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அது அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னால் 'irrelevant', அதாவது பொருட்படுத்த தேவையில்லாதது. தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், தப்பி விடலாம் என்றே அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் இது போன்ற விஷயங்களை யாருடனும் தாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இது போன்ற அரசியல் வாதிகள் அவர்கள் பேசியதற்காக யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு என்பது தற்போதய அமைப்பில் இல்லை. ஆங்கிலத்தில் சொன்னால் அவர்களுக்கு accountability என்பது இல்லை. மக்களை ஒரு அரசியல் சமூகமாக இத்தகையை அரசியல்வாதிகள் அங்கீகரிக்கவும் இல்லை, அவர்களுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்றும் இத்தகைய அரசியல் வாதிகள் உணரவும் இல்லை', என்று கூறுகிறார் சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் ராமு மணிவண்ணன்.

இதே கருத்தை வழி மொழிகிறார்கள் விஜயகாந்த்தின் அரசியலை நீண்ட நாட்களாக அவதானித்து வருபவர்கள். ‘விஜயகாந்த்தை பொறுத்த வரையில் இத்தகைய தேர்தல் வாக்குறுதிகளை குறை கூறுபவர்களைப் பற்றியோ அல்லது அறிவு ஜீவிகளைப் பற்றியோ எந்தக் கவலையும் லவ லேசமும் கிடையாது. காரணம் இத்தகைய விமர்சகர்கள் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும் எப்போதுமே விஜயகாந்திற்கு வாக்கு வங்கி கிடையாது. நான் ஏழைகளின் பாதுகாவலன் என்ற இமேஜை உருவாக்குவதும், ஏழைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சட்டத்தை மீறவும், சட்டத்தை உடைத்தெறியவும் நான் தயங்க மாட்டேன் என்ற கருத்தோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்துவதும் தான் விஜயகாந்தின் நோக்கம்' என்று சாடுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருக்கும் இமாலய தடைகளும், இவை நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்பதும் கேப்டனுக்கு நன்கு தெரியும் என்று மேலும் கூறுகிறார் ரவீந்திரன் துரைசாமி. ‘கேப்டன் ஒன்றும் விஷயம் அறியாதவர் அல்ல. விஜயகாந்தை சுற்றிலும் விஷயம் அறிந்த பேராசிரியர்களும், வழக்கறிஞர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது எப்போதுமே தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விதமான அரசியல் நரித்தனமான காரியம், தெரிந்தே மக்களை கேப்டன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.'

இதுதான் உண்மை எனும் போது இந்தத் துணிச்சல் அரசியல் வாதிகளுக்கு எங்கிருந்து வருகிறது? ‘இந்த அவலச் சூழலுக்கு மக்களும் ஓரளவுக்கு என்பதை தாண்டி சொல்லக் கூடிய அளவுக்கு காரணம் தான். இத்தகைய அபத்தமான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவது பொது மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியின் பிரதிபலிப்புத் தான். எந்தவோர் அரசியல் நேர்மையும் இத்தகைய அரசியல் கட்சிகளிடம் இல்லை. நம்முடைய அரசியல் முற்றிலுமாக சிதைக்கப் பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த அரசியல் சூழலும் முடை நாற்றமெடுத்து நாறிக் கொண்டிருக்கிறது,' என்கிறார் ராமு மணிவண்ணன்.

2006 ம் ஆண்டு முதல் தேர்தல் அறிக்கைகள் தமிழக அரசியலில் கொழுத்த லாபங்களை கட்சிகளுக்கு கொடுத்து கொண்டிருக்கின்றன. 2006 ல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை திமுக வழங்கியது. அத்தத் தேர்தலின் கதாநாயகன் என்று அதனை வருணித்தார் அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம. 2011 தேர்தலில் அம்மாவும், ஐயா வும் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசங்களை - மிக்சி, கிரைண்டர், சீலிங் ஃபேன், ஆடு, மாடுகள், லேப்டாப் - என்று வழங்கி ஜமாய்த்தார்கள்.

அய்யாவையும், அம்மாவையும் முன் மாதிரியாக கொண்டே அரசியல் செய்து கொண்டிருக்கும் கேப்டன் தற்போது தன் பங்கிற்கு சரமாரியாக வாக்குறுதிகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வாக்குறுதிகளின் அரசியல், பொருளாதார கூறுகளை விட்டுத் தள்ளுங்கள்... அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். காற்றில் கத்தி வீசும் இந்த வாக்குறுதிகளில் எந்த தர்க்கவியல் கூறுகளும் இல்லை என்பதுதான் அடிப்படையான உண்மை.

தமிழ் நாட்டு இடதுசாரிகள் நிச்சயம் தங்களது காலர்களை நன்றாக நிமிர்த்தி விட்டுக் கொள்ளலாம்!

English summary
R Mani's critical analysis on DMDK's election manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X