கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா.. 3 பேர்.. 2 பதவி... ஸ்டாலினின் வியூகம் என்ன?

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில், இப்போதே கட்சியில் நிறைய பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று இப்போதே கோபாலபுரம் வட்டாரத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் எப்படி நடக்கும்
திமுக விதிமுறைகளின்படி இந்த தேர்தல் மிகவும் ஜனநாயக முறைப்படி நடக்கும். தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம். 28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். இதில் திமுக பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் வெற்றிபெறுவார்.

தலைவர் பதவிக்கு யார்
திமுக கட்சியின் தற்போதைய செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இவர்தான் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே,பல்வேறு மாவட்டங்களில் திமுக மாவட்ட செயற்குழு கூடி, ஸ்டாலினுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாளர் பதவி
திமுகவில் தற்போது பிரச்சனையாக இருப்பது, பொருளாளர் பதவிதான். இந்த பதவியைதான் அழகிரி திமுகவிடம் கேட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த பதவி திமுகவில் மூன்று தலைவர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்த பதவி, துரைமுருகன், கனிமொழி, ஆ ராசா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவருக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ரேஸில் துரைமுருகன்தான் முன்னிலையில் உள்ளார்.

துணை பொதுச்செயலாளர் பதவி
ஏற்கனவே கட்சியில் அழகிரி சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனிமொழியையும் பகைத்துக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்று பேச்சு அடிபடுகிறது. இதனால், திமுகவில் துணை பொதுச்செயலாளர் என்ற பதவியை, ஸ்டாலின், கனிமொழிக்கு வழங்க வாய்ப்புள்ளது. இதற்கு தேர்தல் நடத்தாமல் நேரடியாக தேர்ந்தெடுக்கும் நிகழ்வு கூட நடக்கலாம் என்றும் திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்.

குழப்பத்தில் ஸ்டாலின்
இந்த இரண்டு பதவிகளால் ஸ்டாலின் பெரிய குழப்பத்தில் இருப்பதாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால்தான் செப்டம்பர் 1ம் தேதி கூட்டவேண்டிய பொதுக்குழுவை இந்த மாதம் 28ம் தேதி நடத்த முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். அதே சமயம், இதற்கான பதவி ஏற்பு விழாவை சென்னையில் பெரிய அளவில் தனியாக வேறு ஒருநாள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!